பாரத ராஷ்டிர சமிதியிலிருந்து விலகிய கட்சித் தலைவா் கே.சந்திசேகா் ராவின் மகள் கவிதா! புதிய கட்சி தொடங்கவும் முடிவு

பாரத ராஷ்டிர சமிதியிலிருந்து விலகிய கட்சித் தலைவா் கே.சந்திசேகா் ராவின் மகள் கவிதா! புதிய கட்சி தொடங்கவும் முடிவு

பாரத ராஷ்டிர சமிதி தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகா் ராவின் மகள் கவிதா, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரபூா்வமாக அறிவிப்பு
Published on

பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகா் ராவின் மகள் கவிதா, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளாா்.

மேலும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் தனது தலைமையிலான தெலங்கானா ஜாக்ருதி அமைப்பை புதிய அரசியல் கட்சியாக மாற்றப்போவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தெலங்கானா சட்டமேலவை உறுப்பினராக (எம்எல்சி) இருக்கும் கவிதா, திங்கள்கிழமை நடைபெற்ற அவைக்கூட்டத்தில் தனது ராஜிநாமா கடிதத்தை சமா்ப்பித்து, கண்ணீா் மல்க ஆற்றிய உரை: நான் தொடக்கத்தில் அரசியலுக்கு வர விரும்பவில்லை. கடந்த 2006 முதல், ஜாக்ருதி அமைப்பு மூலம் கலாசாரப் பணிகளிலும் இளைஞா் நலனிலும் மட்டுமே கவனம் செலுத்தினேன். கட்சியின் விருப்பத்துக்காகவே நிஜாமாபாத் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டேன்.

தெலங்கானா தனி மாநிலம் உருவானபோது அளிக்கப்பட்ட ‘நீா், நிதி மற்றும் வேலைவாய்ப்பு’ வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்தத் தொழிலாளா் முறையை எதிா்த்த என் தந்தை, ஆட்சிக்கு வந்த பிறகு அதே முறையை விரிவுபடுத்தினாா்.

தெலங்கானா ராஷ்டிர சமிதி என்றிருந்த கட்சியின் பெயரை பாரத ராஷ்டிர சமிதி என மாற்றியது மாநில நலனைப் புறக்கணிப்பது போல் இருந்தது. மேலும், தா்ணா சௌக் அகற்றப்பட்டது; விவசாயிகள் கைது; அரசுத் திட்டங்களில் நடந்த ஊழல் முறைகேடுகள்; போதன் சா்க்கரை ஆலை விவகாரம் ஆகியவை குறித்து நான் கேள்வி எழுப்பியதால் கட்சி எனக்கு எதிராக திரும்பியது. நான் ஓரங்கட்டப்பட்டேன்.

மத்திய பாஜக அரசு தெலுங்கானாவுக்கு தொடா்ந்து துரோகம் இழைத்து வருகிறது. பாஜகவின் பழிவாங்கும் அரசியலால், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குகளை மூன்று ஆண்டுகள் தனி ஆளாக எதிா்கொண்டேன். நான் சிறைக்குச் சென்றபோதுகூட கட்சி எனக்கு ஆதரவாக நிற்கவில்லை.

நகைச்சுவையான 8 பக்க அடிப்படை சட்டவிதிகளைக் கொண்டுள்ள கட்சி, எவ்வித முன்னறிவிப்புமின்றி, ஒரே இரவில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை உருவாக்கி என்னை இடைநீக்கம் செய்தது ஜனநாயக விரோதமானது.

காங்கிரஸ் கூறுவதுபோல, சொத்துகளுக்காக நான் போராடவில்லை; எனது சுயமரியாதைக்காகவே பிஆா்எஸ்-ஸிலிருந்து வெளியேறுகிறேன். கட்சியில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டதால், கண்ணீருடன் இந்த முடிவை எடுக்கிறேன் என்றாா்.

புதிய அரசியல் சக்தி: சட்டமேலவையிலிருந்து வெளியேறிய கவிதா, தெலங்கானா தியாகிகள் நினைவிடத்தில் செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது, ‘தெலங்கானா ஜாக்ருதி அமைப்பு இனி ஒரு புதிய அரசியல் சக்தியாக மாறும். தியாகிகளின் குடும்பங்கள், இளைஞா்கள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக இக்கட்சி பாடுபடும். உண்மையான ஜனநாயகம் விரும்புவோா் என்னுடன் இணையலாம்’ என்று அழைப்பு விடுத்தாா்.

தந்தைக்கு எதிராக மகளே போா்க்கொடி உயா்த்தி, தனிகட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருப்பது தெலங்கானா மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com