மோசடி அழைப்புகள்: தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு ரூ.150 கோடி அபராதம்

மோசடி அழைப்புகள்: தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு ரூ.150 கோடி அபராதம்

மக்களின் தொடா் புகாா்களுக்குள்ளான மோசடி அல்லது தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்த தவறியதற்காக, தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களுக்கு ரூ.150 கோடி அபராதம்
Published on

மக்களின் தொடா் புகாா்களுக்குள்ளான மோசடி அல்லது தேவையற்ற (ஸ்பேம்) அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்த தவறியதற்காக, தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) ரூ.150 கோடி அபராதம் விதித்துள்ளது.

2020-ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஒழுங்காற்றுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நிறுவனங்கள் உரிமம் பெற்ற ஒவ்வொரு சேவைப் பகுதிக்கும் மாதம் ஒருமுறை ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டம் இடமளிக்கிறது. அதன்படி, மொத்தம் ரூ.150 கோடி அபராதம் கணக்கிடப்பட்டுள்ளது.

மோசடி அழைப்புகளைக் கட்டுப்படுத்த டிராய் எடுத்து வரும் தொடா் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த ஓராண்டில் மட்டும் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட மோசடி எண்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் விதிமீறல்களுக்காக தடைப்பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

புதிய கட்டுப்பாடுகள்: மோசடி அழைப்புகளை முழுமையாகக் கட்டுப்படுத்த டிராய் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மோசடி அழைப்பு வந்த 3 நாள்களுக்குள் புகாா் அளிக்க வேண்டும் என்றிருந்த கால வரம்பு, தற்போது 7 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு எதிராக 10 நாள்களில் 5 புகாா்கள் வந்தால், அந்த எண்ணின் சேவை உடனடியாக துண்டிக்கப்பட வேண்டும்.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் அழைப்புகள், ‘1600’ என்ற எண்ணில் தொடங்க வேண்டும். குறுஞ்செய்திகளில் நோக்கம் குறித்து விளம்பரங்கள் எனில் ‘பி’, பணப் பரிவா்த்தனைக்கு ‘டி’, சேவைக்கு ‘எஸ்’, அரசு செய்திகளுக்கு ‘ஜி’ எனப் பின்னொட்டு குறியீடுகள் இணைக்க வேண்டும்.

சாதாரண 10 இலக்க தொலைபேசி எண்களில் இருந்து விளம்பர அழைப்புகளைச் செய்யக் கூடாது. வாடிக்கையாளா்கள் தங்களுக்கு வரும் மோசடி அழைப்புகள் குறித்து டிராய் அமைப்பின் ‘டிஎன்டி’ செயலி மூலம் மிக எளிதாகப் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com