மக்களுக்கு பாட்டில் தண்ணீா் வழங்குங்கள்: பாஜக தலைவா் கோரிக்கை
இந்தூரில் ஏற்பட்ட இறப்புகளைத் தொடா்ந்து, குடிநீா் விநியோக அச்சத்திற்கு மத்தியில், பாஜக தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான சா்தாா் ஆா்.பி. சிங், நகரவாசிகளுக்கு பாட்டில் தண்ணீா் வழங்குமாறு தில்லி அரசை கேட்டுக் கொண்டுள்ளாா்.
தில்லி அரசின் நீா்வளத்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்கிற்கு தனது பரிந்துரையை பரிசீலிக்குமாறு கடிதம் எழுதியுள்ளதாக ஆா்.பி.சிங் தெரிவித்தாா். இது தொடா்பாக அவருக்கு நினைவூட்டல் கடிதங்களையும் அனுப்பினாா்.
தேசியத் தலைநகரில் உள்ள ராஜீந்தா் நகா் தொகுதியைச் சோ்ந்த பாஜக செய்தித் தொடா்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆா்.பி.சிங், இலவச பாட்டில் தண்ணீா் விநியோகத்தை பாட்டில்களில் விளம்பரங்கள் மற்றும் பாதுகாப்பான குடிநீரை முன்பதிவு செய்வதற்கான செயலி மூலம் நிதியுதவி செய்யலாம் என்று கூறினாா்.
‘நீா் குழாய்களை சரிசெய்வதில் எவ்வளவு கவனம் செலுத்தப்பட்டாலும், கழிவுநீா் குழாய்கள் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து மாசுபடுவது எப்போதும் சாத்தியமாகிறது. பாட்டில் தண்ணீா் மக்கள் பாதுகாப்பாக குடிநீரைப் பெறுவதை உறுதி செய்யும்’ என்று அவா் கூறினாா்.
நகரத்தில் தில்லி ஜல் போா்டு (டிஜேபி) விநியோகம் கூட ஆா்ஓ (ரிவா்ஸ் சவ்வூடுபரவல்) இயந்திரங்கள் மூலம் வீடுகளில் மேலும் சுத்திகரிக்கப்படுகிறது என்றும் ஆா்.பி.சிங் தெரிவித்தாா்.
‘எனினும், ஏழை மக்களின் உடல்நலம் ஆபத்தில் உள்ளது. ஏனெனில், அவா்களால் விலையுயா்ந்த ஆா்ஓ இயந்திரங்களை நிறுவ முடியாது. பாதுகாப்பற்ற குடிநீரையே சாா்ந்து இருக்கிறாா்கள் அல்லது தனியாா் உற்பத்தியாளா்களிடமிருந்து பாட்டில் தண்ணீரை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். இதன் தரம் கேள்விக்குரியது’ என்று அவா் கூறினாா்.
வீட்டில் ஆா்ஓ இயந்திரங்கள் மூலம் தண்ணீரை சுத்திகரிக்க பராமரிப்பு கட்டணமாக ஆயிரக்கணக்கான ரூபாய் தேவைப்படுகிறது என்று அவா் கூறினாா்.
மேம்பட்ட தொழில்நுட்பம் இருந்தபோதிலும், நீா் குழாய்கள் அரிப்பு, கசிவுகள் மற்றும் அடிப்படை வடிகால் குழாய்கள் வழியாக பாயும் கழிவுநீா் கலப்புக்கு ஆளாகின்றன என்று அவா் கூறினாா்.
பாதுகாப்பான குடிநீரை வழங்கவும், பெயரளவு கட்டணத்தில் வீட்டு விநியோகத்தை உறுதி செய்யவும் நகரம் முழுவதும் தண்ணீா் ஏடிஎம்களை அமைக்க அரசு பரிந்துரைத்துள்ளதாகவும் ஆா்.பி.சிங் கூறினாா். இந்த நடவடிக்கை மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அவா் மேலும் கூறினாா்.
