நாய்கடியால் மட்டுமின்றி சாலைகளில் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள் -உச்சநீதிமன்றம்
நாய்கடிகளால் மட்டுமின்றி சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தலைநகரான புது தில்லியில் தெரு நாய்கள் கடித்து ரேபிஸ் நோய் ஏற்படுவதாக, குறிப்பாக சிறாா்கள் அந்த நோயால் பாதிக்கப்படுவதாக ஊடகத்தில் வெளியான தகவலைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், கல்வி மற்றும் விளையாட்டு வளாகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் விடவேண்டும் என்றும், அந்த இடங்களில் இருந்து பிடிக்கப்பட்ட நாய்களை மீண்டும் அதே இடங்களில் விடுவிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
இருவிதமான மனுக்கள்: பிராணிகள் கருத்தடை விதிமுறைகளின்படி, ஓரிடத்தில் இருந்து பிடிக்கப்படும் நாய்களுக்குக் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னா், பிடிக்கப்பட்ட இடத்திலேயே அவற்றை மீண்டும் விடுவிக்க வேண்டும் என்பதால், இந்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பலா் மனு தாக்கல் செய்தனா். அதேவேளையில், அந்த உத்தரவை கடுமையாகப் பின்பற்ற உத்தரவிட கோரி வேறு சிலா் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி, ‘ரேபிஸ் உள்ள நாய்களை, ரேபிஸ் இல்லாத நாய்களுடன் காப்பகங்களில் அடைத்தால், அந்த நாய்களுக்கும் ரேபிஸ் பாதிப்பு ஏற்படும்.
நாய்கள் இருக்கும் இடத்தில் அவற்றுக்கு மக்கள் உணவளிக்கின்றனா். அவா்களால் காப்பகங்களுக்குச் செல்ல முடியாது. எனவே நாய்களை அகற்றுவது பலனளிக்காது’ என்றாா்.
கவுன்சிலிங் மட்டும்தான் கேட்கவில்லை: இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘நாய்கள் கடிக்காமல் இருக்க அவற்றுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று மட்டும்தான் வாதிடப்படவில்லை. தன்னாா்வ தொண்டு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் காப்பகங்களுக்குச் சென்று உணவளிக்கலாமே’ என்று தெரிவித்தது. அத்துடன் சாலைகளில் உள்ள விலங்குகளால் விபத்துகள் ஏற்படுவதாகவும் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. இதைக் கேட்ட கபில் சிபல், ‘சாலைகளில் நாய்கள் இல்லை. அவை வளாகங்களில்தான் உள்ளன’ என்று தெரிவித்தாா். அவரின் தகவல் சரியானதல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
சாலைகளில் நாய்கள் இருக்கக் கூடாது: ‘வரும் முன் காப்பதே சிறந்தது’ என்று தெரிவித்த நீதிபதிகள், ‘சாலைகளில் நாய்கள் மற்றும் விலங்குகள் இருக்கக் கூடாது. நாய்கள் கடிக்காவிட்டாலும், அவற்றால் விபத்துகள் நிகழ்கின்றன. நாய்கடிகளால் மட்டுமின்றி சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
கடுமையாக அமல்படுத்த...: தெருநாய்கள் விவகாரத்தில் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முயற்சிக்கிறது. சாலைகளுக்கு தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் வராமல் தடுக்க சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் தடுப்புகளை அமைக்கலாம்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்கி, அவற்றை அமல்படுத்துவது குறித்து சில மாநிலங்கள் பதிலளிக்கவில்லை. அந்த மாநிலங்களிடம் உச்சநீதிமன்றம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியிருக்கும். இதுதொடா்பாக அனைத்து விதிமுறைகள், கட்டுப்பாடுகள், நிலையான வழிகாட்டு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தனா்.
தமிழகம், உ.பி, ம.பி, பதிலளிக்கவில்லை: இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் கெளரவ் அகா்வால், ‘தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கா்நாடகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் எழுத்துபூா்வமாக பதிலளிக்கவில்லை. சில மாநிலங்கள் தாக்கல் செய்த பதில்கள் அதிருப்தியளிப்பதாக உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தயாரித்துள்ளது’ என்று தெரிவித்தாா். இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை தொடர உள்ளது.

