

பாஜக - காங்கிரஸ் கூட்டணி: மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் நகராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்காக காங்கிரஸுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கூட்டணியே அமைக்காத இரு கட்சிகள் என்றால் பாஜக - காங்கிரஸ் என்று அனைவரும் எளிதில் கூறிவிடுவார்கள். ஆனால், மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் அரசியலில் நிரந்திர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பதை நிரூபித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்த உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்ததில் இருந்தே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கும் பாஜகவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், பல்வேறு இடங்களில் பாஜகவும், சிவசேனையும் நேருக்குநேர் மோதின.
இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தாணே மாவட்டத்தின் அம்பர்நாத் நகராட்சிக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நகராட்சியில் பாஜக - ஏக்நாத் ஷிண்டே சிவசேனைக்கு இடையே உடன்பாடு எட்டப்படாத நிலையில், இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன.
மொத்தமுள்ள 60 இடங்களில் நகராட்சித் தலைவர் பதவியைப் பெற 31 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், சிவசேனை 27 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக 14, காங்கிரஸ் 12, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 4, சுயேச்சை 2 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன.
நகராட்சித் தலைவர் பதவிக்கு பாஜக தேஜஸ்ரீ கரஞ்சுலேயும், சிவசேனை மனிஷா வாலேகரையும் வேட்பாளராக அறிவித்தது.
இந்த நிலையில், பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸின் 12, தேசியவாத காங்கிரஸின் (அஜித் பவார்) 4, ஒரு சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். இதன்மூலம் 31 உறுப்பினர்கள் ஆதரவுடன் பாஜகவின் தேஜஸ்ரீ கரஞ்சுலே நகராட்சித் தலைவராகவுள்ளார்.
இதன்மூலம் 25 ஆண்டுகாலமாக சிவசேனையின் கோட்டையாக இருந்த அம்பர்நாத் நகராட்சியை அக்கட்சி இழந்துள்ளது.
இதனிடையே, பாஜக - காங்கிரஸ் கூட்டணிக்கு அம்பர்நாத் விகாஸ் அகாடி எனப் பெயரிட்டுள்ளதாக தாணே மாவட்ட ஆட்சியருக்கு பாஜக எழுதியுள்ள கடிதம் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் - பாஜக கூட்டணியை விமர்சித்த சிவசேனை எம்.எல்.ஏ. பாலாஜி கினிகர், “புனிதமற்ற, சந்தர்ப்பவாதக் கூட்டணியை அமைத்துள்ளனர். ஒருபுறம், தேசிய அளவில் 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' என்ற முழக்கங்களை பாஜக எழுப்புகிறது, மறுபுறம், அம்பர்நாத்தில் அதிகாரத்திற்காக அதே காங்கிரஸுடன் கூட்டணி வைக்கத் தயங்கவில்லை.” எனத் தெரிவித்தார்.
பாஜக நகரத் தலைவர் அபிஜித் கரஞ்சுலே அளித்துள்ள விளக்கத்தில், "கருத்தியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நகரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாஜக, காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனையை வீழ்த்துவதற்காக காங்கிரஸுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.