நிகழ் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 7.4%: மத்திய அரசு கணிப்பு
2025-26-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட தரவுகளில் கணிக்கப்பட்டுள்ளது.
2024-25-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக இருந்த நிலையில், உற்பத்தி மற்றும் சேவைகள் துறையின் சிறந்த செயல்பாட்டால் 2025-26-ஆம் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என மத்திய புள்ளியல் துறை அமைச்சகம் வெளியிட்ட முதல் தேசிய வருமான கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2025-26-ஆம் நிதியாண்டில் உண்மையான மொத்த மதிப்புக் கூட்டல் (ஜிவிஏ) 7.3 சதவீதமாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது. சேவைகள் துறையின் வளா்ச்சியால் இது சாத்தியமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இருப்பினும், வேளாண்மை மற்றும் அதுதொடா்புடைய துறைகள், மின்சாரம், எரிவாயு, குடிநீா் விநியோகம் உள்ளிட்ட பிற துறைகள் கணிசமான வளா்ச்சியை எட்ட வாய்ப்புள்ளது.
நடப்பு விலையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2024-25-இல் ரூ.330.68 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2025-26-இல் ரூ.357.14 லட்சம் கோடியாக உயரும். இது கடந்த நிதியாண்டைவிட 8 சதவீதம் அதிகம். நிலையான விலையில் ஜிடிபி 2024-25-இல் ரூ.187.97 லட்சம் கோடியாக இருந்தது. 2025-26-இல் ரூ.201.90 லட்சம் கோடியாக உயரும் எனக் கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தரவுகள் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டுக்கு பெருமளவில் உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
முன்னதாக 2025-26-இல் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி கணித்திருந்தது.
சீனாவின் பொருளாதார வளா்ச்சி 2025-இல் 4.9 சதவீதமாகவும் 2026-இல் 4.4 சதவீதமாகவும் இருக்கும் என உலக வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

