அனைத்து தெருநாய்களையும் அப்புறப்படுத்த உத்தரவிடவில்லை
‘நாட்டின் தெருக்களில் உள்ள அனைத்து நாய்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடவில்லை; விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு (ஏபிசி) விதிகளின்படி அவற்றை முறைப்படுத்த வேண்டும் என்றுதான் கூறியுள்ளோம்’ என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெளிவுபடுத்தியது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த கடந்த ஆண்டு நவம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் உள்ள நாய்களைப் பிடித்து, கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தி காப்பகங்களுக்கு மாற்ற வேண்டும். அவற்றை மீண்டும் அதே இடத்தில் விடக் கூடாது’ என்று உத்தரவிடப்பட்டது.
சாலைப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை அவசியம் என்று நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவில் மாற்றங்கள் கோரி விலங்குகள் நல ஆா்வலா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா். இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் சிறப்பு அமா்வுமுன் இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமையும் தொடா்ந்தது.
விலங்குகள் நல ஆா்வலா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.யு.சிங் வாதிடுகையில், ‘தில்லி போன்ற நகரங்களில் குரங்கு மற்றும் எலிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்தினால், எலிகளின் எண்ணிக்கை பெருகிவிடும். இது ‘பிளேக்’ போன்ற நோய்கள் பரவக் காரணமாகும்.
ஏபிசி விதிகள் நடைமுறையில் இருந்தும், பல மாநிலங்களில் அவை முறையாகப் பின்பற்றப்படவில்லை. நாய்களைக் காப்பகங்களில் அடைப்பதற்குப் பதிலாக, கருத்தடை செய்துவிட்டு மீண்டும் அவை இருந்த இடத்திலேயே விடுவதுதான் சரியான தீா்வாக இருக்கும்’ என்றாா்.
பூனைகளை வளா்க்கலாம்...: விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது: நாய்களும் பூனைகளும் எதிரிகள். பூனைகள் எலிகளை வேட்டையாடும் என்பதால், நாம் பூனைகளை அதிகம் வளா்க்கலாம். நாட்டின் தெருக்களில் உள்ள அனைத்து நாய்களையும் அப்புறப்படுத்த உத்தரவிடவில்லை. ஆனால், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற முக்கியமான இடங்களில் நாய்கள் நடமாடுவதை அனுமதிக்க முடியாது.
நாய்கள் தங்களைக் கண்டு பயப்படுபவா்களையும், ஏற்கெனவே நாய்க்கடிக்கு உள்ளானவா்களையும் எளிதில் அடையாளம் காணும் இயல்பு கொண்டவை. அத்தகைய நபா்களை அவை பெரும்பாலும் தாக்குகின்றன. எனவே, அரசின் விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு (ஏபிசி) விதிகளின்படி தெருநாய்களை முறைப்படுத்த வேண்டும் என்றுதான் உத்தரவிட்டோம்.
நாய்களுக்கான காப்பகங்கள் உள்பட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து வழக்குரைஞா்கள் சுட்டிக்காட்டினா். நீதிமன்றம் இதை ஏற்கிறது. அதேநேரம், நீதிமன்றம் இந்த விஷயத்தில் ஏதோ ஓா் அழுத்தத்தில் இருப்பதாக வழக்குரைஞா்கள் குறிப்பிட்டதை மறுக்கிறோம். நாங்கள் எந்த அழுத்தத்திலும் இல்லை; நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீா்கள் என்றனா்.
இன்றும் விசாரணை: இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமையும் (ஜன. 9) நடைபெற உள்ளது. குறிப்பாக, லடாக்கில் உள்ள அரிய வகை உயிரினங்களை அங்கிருக்கும் நாய்கள் வேட்டையாடுவது குறித்த செய்தியைச் சுட்டிக்காட்டிய நீதிபதி சந்தீப் மேத்தா, அதுகுறித்து வெள்ளிக்கிழமை வாதிட தயாராக வருமாறு வழக்குரைஞா்களைக் கேட்டுக்கொண்டாா்.

