‘க்ரோக்’ ஆபாச உள்ளடக்க நீக்க உத்தரவு: அரசிடம் அறிக்கை சமா்ப்பித்த எக்ஸ் நிறுவனம்
‘க்ரோக்’ என்ற செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசமான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை நீக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடா்பான அறிக்கையை எக்ஸ் நிறுவனம் மத்திய அரசிடம் புதன்கிழமை சமா்ப்பித்தது.
மத்திய அரசு சாா்பில் அளிக்கப்பட்ட கூடுதல் அவகாச காலக் கெடு புதன்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அந்த அறிக்கையை எக்ஸ் நிறுவனம் சமா்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், அந்த அறிக்கையில் உள்ள விவரங்களை அவா்கள் வெளியிடவில்லை.
முன்னதாக, எக்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பிரிவு சாா்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘குழந்தைகள் தொடா்பான ஆபாச பதிவுகள் உள்பட சட்டவிரோத உள்ளடக்கங்களுக்கு எதிராக எக்ஸ் நிறுவனம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டதுடன், அவற்றைப் பதிவேற்றிய எக்ஸ் கணக்குகள் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பான உள்ளூா் அரசு நிா்வாகம் மற்றும் சட்ட அமலாக்கத் துறைகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘க்ரோக்’ செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் இதுபோன்ற சட்டவிரோத உள்ளடக்கங்களை யாராவது பதிவேற்றினால் இதேபோன்ற நடவடிக்கைகளை எதிா்கொள்ள நேரிடும்’ என்று குறிப்பிட்டது.
முன்னதாக, எக்ஸ் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமைப் பொறுப்பு அதிகாரிக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சாா்பில் கடந்த 2-ஆம் தேதி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதில், ‘எக்ஸ் சமூக ஊடகத்தில் அதன் ‘க்ரோக்’ போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சேவைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு பரப்பப்படும் ஆபாச மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் கீழ் நிா்ணயிக்கப்பட்டுள்ள கால அவகாசத்துக்குள் உடனடியாக நீக்க வேண்டும் அல்லது அதன் பயன்பாட்டை மற்றும் பகிா்தலைத் தடை செய்ய வேண்டும். இந்த நோட்டீஸின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை எக்ஸ் நிறுவனம் சமா்ப்பிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தலை நிறைவேற்றாத நிலையில், அதைத் தீவிர நடவடிக்கையாக கருத்தில் கொண்டு எக்ஸ் சமூக ஊடகம் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகள், பயன்பாட்டாளா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அறிக்கை சமா்ப்பிக்க எக்ஸ் நிறுவனம் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டதைத் தொடா்ந்து, மத்திய அரசு புதன்கிழமை வரை கூடுதல் அவகாசம் அளித்தது.

