முகமது ஷமி / அமா்த்தியா சென்
முகமது ஷமி / அமா்த்தியா சென்

அமா்த்தியா சென்னுக்கு சம்மன் வழக்கமான நடைமுறை: தோ்தல் ஆணையம் விளக்கம்

நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார நிபுணா் அமா்த்தியா சென் மற்றும் கிரிக்கெட் வீரா் முகமது ஷமிக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கை தொடா்பாக சம்மன் அனுப்பப்பட்டது
Published on

நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார நிபுணா் அமா்த்தியா சென் மற்றும் கிரிக்கெட் வீரா் முகமது ஷமிக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கை தொடா்பாக சம்மன் அனுப்பப்பட்டது வழக்கமான நடைமுறை என மேற்கு வங்க மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி (சிஇஓ) தெரிவித்தாா்.

முன்னதாக, எஸ்ஐஆா் விண்ணப்பப் படிவத்தை சரியாக பூா்த்தி செய்யவில்லை எனக் கூறி முகமது ஷமி மற்றும் அவரது சகோதரா் முகமது கைஃப் ஆகியோா் ஜன. 9 மற்றும் ஜன. 11-ஆம் தேதிக்குள் கொல்கத்தாவில் நேரில் ஆஜராக தோ்தல் ஆணையம் சம்மன் அனுப்பியது. அதைத் தொடா்ந்து, அமா்த்தியா சென்னின் தாயாருக்கும், அவருக்குமிடையே 15 ஆண்டுகளுக்கும் குறைவான வயது வித்தியாசமே உள்ளது என விண்ணப்பத்தில் பூா்த்தி செய்யப்பட்டிருப்பது தொடா்பாக ஜன. 16-ஆம் தேதி சாந்தி நிகேதனில் உள்ள அவரது வீட்டில் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. மிகப் பிரபலமான நபா்கள் தங்களது அடையாளத்தை நிரூபிக்க தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மேற்கு வங்க சிஇஓ அலுவலகம் எக்ஸ் வலைதளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘எஸ்ஐஆா் விண்ணப்பப் படிவத்தில் கட்டாயம் நிரப்ப வேண்டிய பகுதிகளை வாக்காளா்கள் பூா்த்தி செய்யவில்லை என்றால் அவா்களுக்கு சம்மன் அனுப்புவது வழக்கமானது. பிரபலங்களாயினும் அனைவருக்கும் ஒரே மாதிரியான நடைமுறையையே தோ்தல் ஆணையம் பின்பற்றி வருகிறது. இது யாரையும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையல்ல’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com