மசூதி இடிக்கப்படுவதாக விடியோ வெளியிட்ட சமூக ஊடக பிரபலத்துக்கு அழைப்பாணை
துா்க்மான் கேட் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையின்போது ஃபைஸ்-ஏ-இலாகி மசூதி இடிக்கப்பட்டதாகத் தவறான தகவலைப் பரப்பிய 10 சமூக ஊடக பிரபலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.
அவா்களில் ஒரு பெண்ணுக்கு விசாரணையில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது: தில்லி ராம்லீலா மைதானத்தில் உள்ள மசூதி இடிக்கபடுவதாக ஒரு விடியோவில் அந்தப் பெண் கூறியிருப்பதை காவல் துறையின் சமூக ஊடக கண்காணிப்பு குழுவினா் கண்டறிந்தனா். இதையடுத்து, அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட அந்த விடியோக்கள் தவறானவை. இதனால், ஏற்பட்ட வன்முறையால் காவலா்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
சமூக ஊடகத்தில் பகிரப்படும் கருத்துகளை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் பலா் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனா். அடையாளம் காணப்பட்ட பிற சமூக ஊடக பிரபலங்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றாா் அந்த அதிகாரி.
வாட்ஸ் குழுவில் பரவிய குரல் செய்தியால் வன்முறை:
ஃபைஸ்-ஏ-இலாகி மசூதி இடிக்கப்படுவதாக வாட்ஸ் ஆப் குழுக்களில் தவறான குரல் செய்தி பகிரப்பட்டது வன்முறைக்குக் காரணமானது என காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அந்த அதிகாரிகள் கூறியதாவது: உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, தில்லி மாநகாரட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் மசூதி இடிக்கப்பட உள்ளதாக பல வாட்ஸ் ஆப் குழுக்களில் தவறான தகவல் குரல் செய்தியாகப் பகிரப்பட்டது.
பல வாட்ஸ் குழுக்கள் காவல் துறை கண்காணிப்பில் உள்ளள நிலையில், இதுபோன்ற தவறான தகவல் பகிரப்பட்டது. தகவல் பரவத் தொடங்கிய உடனேயே துணை காவல் ஆணையா் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அமான் குழு உறுப்பினா்கள், சமூகத்தின் மூத்தவா்கள் மற்றும் மதத் தலைவா்களை அணுகி, மசூதி மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்தனா்.
முன்கூட்டியே திட்டமிட்டு போலியான தகவல் பகிரப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா் என்றனா் அந்த அதிகாரிகள்.

