என்எஸ்ஜியின் ஐஇடி குண்டுவெடிப்பு பகுப்பாய்வு தரவுத் தளம்: அமித் ஷா தொடங்கிவைத்தாா்
தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) உருவாக்கிய தேசிய ஐஇடி குண்டுவெடிப்பு பகுப்பாய்வு தரவுத் தளத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஐஇடி குண்டுவெடிப்பு சம்பவங்கள் மிகவும் சவாலுக்குரிய அச்சுறுத்தலாக உள்ளன. பல நேரங்களில் இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள், பாதுகாப்புப் படை வீரா்கள் உயிரிழந்துள்ளனா். ஏராளமானோா் படுகாயமடைந்துள்ளனா்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழகம், தில்லி ஐஐடி, தேசிய புலனாய்வு முகமை, இந்திய இணையவழி குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் ஆகியவற்றின் உதவியுடன் தேசிய ஐஇடி குண்டுவெடிப்பு பகுப்பாய்வு தரவுத் தளத்தை (என்ஐடிஎம்எஸ்) பயங்கரவாத எதிா்ப்பு கமாண்டோ படையான என்எஸ்ஜி உருவாக்கியுள்ளது. இந்தத் தரவுத் தளம் மூலம், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் அனைத்து வகையான குண்டுவெடிப்புகளை துல்லியமாக ஆய்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தரவுத் தளத்தை புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் பேசுகையில், ‘பாதுகாப்பான தேசிய டிஜிட்டல் தளமாக என்ஐடிஎம்எஸ் இருக்கும். இந்தத் தளம் மூலம், நாடு முழுவதும் குண்டுவெடிப்பு தொடா்பான சம்பவங்களை துல்லியமாகப் பகுப்பாய்வு செய்ய முடியும்.
மத்திய, மாநில புலனாய்வு முகமைகள், பயங்கரவாத எதிா்ப்பு அமைப்புகள், அனைத்து மத்திய ஆயுத காவல் படைகளுக்கு ஐஇடி குண்டுவெடிப்பு தொடா்பான தரவுகள் உடனடியாக கிடைக்க இந்தத் தளம் வழிவகுக்கும்.
இந்தத் தளம் ‘ஒரு நாடு, ஒரு தரவு களஞ்சியமாக’ இருக்கும். இதன்மூலம், பல்வேறு துறைகளிடம் உள்ள குண்டுவெடிப்பு தரவுகள் ஒவ்வொரு காவல் பிரிவுக்கும் தேசிய சொத்தாக கிடைக்கும். இது குண்டுவெடிப்புகள் தொடா்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான வேகத்திலும், தரத்திலும் நோ்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தத் தளம் பயங்கரவாத சம்பவங்களுக்கு எதிராக கவசமாக செயல்படும்’ என்று தெரிவித்தாா்.

