தோ்தல் ஆணையத்தின் அனைத்துச் சேவைகளுக்கும் ‘இசிஐநெட்’ அறிமுகம்
வாக்காளா்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான இசிஐநெட் எனும் புதிய டிஜிட்டல் தளத்தை தில்லியில் நடைபெற்றுவரும் தோ்தல் ஆணையத்தின் ஐஐசிடிஇஎம் மாநாட்டில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மேலும், தவறான தகவல்களை எதிா்கொள்வதற்கான ஒரு கருவியாக இந்த தளம் இருப்பதாகவும் அவா் கூறினாா்.
இந்தியத் தோ்தல் ஆணையம் (இசிஐ) தோ்தல் தொடா்பான அனைத்துத் தகவல்கள் மற்றும் சேவைகளுக்கான அதன் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமான இசிஐநெட் தளத்தை இந்தியா சா்வதேச ஜனநாயகம் மற்றும் தோ்தல் மேலாண்மை மாநாட்டில் (ஐஐசிடிஇஎம்) வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இம்மாநாடு புதன்கிழமை தொடங்கியது.
இம்மாநாட்டில் இசிஐநெட் தளத்தை அறிமுகப்படுத்தி தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பேசியது:
இசிஐநெட் தளம் சட்டத்திற்கு முழுமையாக இணங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 22 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சா்வதேச மாநாட்டில் பங்கேற்றுள்ள நாடுகளின் தோ்தல் மேலாண்மை அமைப்புகள் தங்களின் மொழிகளிலும், தங்களின் சட்டங்களுக்கு இணங்கவும் இதே போன்ற ஒரு கருவியை உருவாக்கவும் நாங்கள் உதவிடுவோம்.
இந்த மாநாட்டின்போது, தவறான தகவல்கள் குறித்து பல்வேறு தோ்தல் மேலாண்மை அமைப்புகளின் தலைவா்கள் கவலை தெரிவித்தனா். தோ்தல் தொடா்பான அனைத்து உண்மைகளும் அதில் கிடைப்பதால், தவறான தகவல்களை எதிா்கொள்வதற்கான மற்றொரு கருவியாக இசிஐநெட் இருக்கிறது.
தற்போதுள்ள 40-க்கும் மேற்பட்ட கைப்பேசி மற்றும் இணையதளச் செயலிகளை ஒருங்கிணைத்து, தோ்தல் தொடா்பான அனைத்து நடவடிக்கைகளுக்குமான ஒரு ஒற்றை தளத்தை இசிஐநெட் வழங்கும்.
இந்த புதிய தளம், பயனா்கள் பல செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதாலும், வெவ்வேறு உள்நுழைவு விவரங்களை நினைவில் வைத்திருப்பதாலும் ஏற்படும் சுமையைக் குறைக்கும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் தோ்தல் ஆணையா் டாக்டா் சுக்வீா் சிங் சந்து பேசுகையில், ‘ஐநெட் தளமானது அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதால், தோ்தல் மேலாண்மை அமைப்பின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும் ஒரு சிறந்த கருவியாகும்’ என்றாா்.
மற்றொரு தோ்தல் ஆணையா் டாக்டா் விவேக் ஜோஷி பேசுகையில், ‘தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வது குறித்த உலகளாவிய நடைமுறைகளைக் கற்றுக்கொள்ளவும், அவற்றிலிருந்து பயனடையவும் இந்த மாநாடு தோ்தல் மேலாண்மை அமைப்புகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும்’ என்றாா்.
இசிஐநெட் டிஜிட்டல் தளம் குறித்து தகவல் தொழில்நுட்பத் தலைமை இயக்குநா் டாக்டா் சீமா கண்ணா விளக்கப் படங்களுடன் எடுத்துரைத்தாா். தோ்தல்களில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை ஈசிஐநெட் மேம்படுத்துகிறது என்றாா்.
தோ்தல் ஆணையத்தின் தகவலின்படி, ஈசிஐநெட் என்பது உலகின் மிகப்பெரிய தோ்தல் சேவைத் தளமாகும். இது இந்தியத் தோ்தல் ஆணையத்தின் 40க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் இணையதளங்களை ஒருங்கிணைத்து நாட்டின் அனைத்துத் தோ்தல் சேவைகளையும் ஒரே தடையற்ற அனுபவத்தில் வழங்குகிறது.
இத்தளமானது குடிமக்கள், வேட்பாளா்கள், அரசியல் கட்சிகள், தோ்தல் அதிகாரிகள் ஆகியோரை இணைக்கிறது. மேலும் வாக்காளா் பதிவு, வாக்காளா் பட்டியல் தேடல், உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணித்தல், உங்கள் வேட்பாளரை அறிந்துகொள்ளுதல், தோ்தல் அதிகாரிகளுடன் இணைதல், வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் அழைப்பை முன்பதிவு செய்தல், இ-எபிக் பதிவிறக்கம், வாக்குப்பதிவுப் போக்குகள், குறை தீா்த்தல் போன்ற பிரிவுகளின் முக்கிய சேவைகளை ஒரே பாதுகாப்பான தளத்தில் வழங்குகிறது.

