இன்னும் அஞ்சறைப் பெட்டியில் சேமிப்பா? பெண்கள் அறிய வேண்டிய நிதி மேலாண்மை!
நிதி மேலாண்மை குறித்து ஒவ்வொரு பெண்களும் அறிய வேண்டியது பற்றி


உலகம் பிறந்ததிலிருந்தே, பாலின வேறுபாடு தொடங்கி பெண்கள் பல தனித்துவமான அடிப்படை சவால்களை எதிர்கொண்டுதான் வருகிறார்கள். ஆணுக்கு பெண் சமம் என்று நடைமுறைகள் பல மாறினாலும் இன்னமும் நிதித் துறை மற்றும் நிதி மேலாண்மையில் ஆண்களின் கையே மேலோங்கி உள்ளது.
முதலில், நிதித் துறையில் பாலின ஊதிய இடைவெளி இருந்து வருகிறது. ஆணின் வருமானத்தை விடக் குறைவாக பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. குழந்தைப் பேறு, பராமரிப்புகளால் பெண்கள் பணியாற்றும் ஆண்டுகள் மாறுபடுகின்றன. தொழிலில் சில ஆண்டுகள் பிரேக் விடப்படுகிறது. இதுபோன்றவற்றால் ஊதிய முரண்பாடு, ஓய்வூதியப் பலன்களில் பின்னடைவுகள் ஏற்படுகின்றன.
இவை இப்படியிருக்க பெண்களைப் பொறுத்தவரை நிதி மேலாண்மை என்பது இன்னமும் பெரிய அளவில் தொட்டுப்பார்க்கப்படாத துறையாகவே உள்ளது. நிதி மேலாண்மை என்பது வெறும் திறமை மட்டுமல்ல - அது பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆயுதமாகும். பணத்தைக் கொண்டு இயங்கும் இந்த உலகில் பண சுழற்சியை புரிந்துகொள்வது அதன் பாதுகாப்பு, நிதி சுதந்திரம் மற்றும் பணம் பணத்தை செய்யும் வழிகளை கண்டறிவதற்கு வழிகோலுகிறது.
இதனை ஒரு பெண் கண்டடைய வேண்டும் என்றால், அதற்கு தேவையான அறிவை பெறுவது மற்றும் அச்சமின்றி நிதி செயல்பாடுகளில் ஈடுபடுவது ஒன்றே வழி.
நிதி மேலாண்மையை அடிப்படை புரிதலுடன் தொடங்க வேண்டும். உங்களது நிதி சுழற்சியை முதலில் அறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் கைக்கு வரும் மற்றும் கையிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு ரூபாயையும் கண்காணிக்க வேண்டும்.
இதில் 50/30/20 என்ற விதியைப் பயன்படுத்தி ஒரு பட்ஜெட்டை உருவாக்குங்கள் - தேவைகளுக்கு 50 சதவிகிதம், (வாடகை, உணவு, பயன்பாடுகள்), அவசியம் - 30 சதவிகிதம், சேமிப்பு மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதலில் 20 சதவிகிதம் என்று நிர்ணயித்துக் கொள்ளலாம்.
ஆண்டுதோறும் உங்கள் நிகர வருவாயைக் கணக்கிடுங்கள். இந்த கணக்கீடு மூலம் தேவையற்ற செலவுகளைத் தடுத்து, ஒருவருக்கு இருக்கும் வாய்ப்புகளை அறிய உதவும்.
இதனுடன், முதலில் 3 முதல் 6 மாதங்களுக்கான அடிப்படைச் செலவுகளை மேற்கொள்ள ஒரு அவசர நிதி எனப்படும் சேமிப்பை உருவாக்குங்கள். பெண்கள் பெரும்பாலும் சிறிய அவசரத் தேவைகளுக்கான நிதிகளைத்தான் வைத்திருக்கிறார்கள்; அதுவும் அஞ்சலறைப் பெட்டியில்.. இந்தப் பணம் பெருகாது. இந்த அவசர நிதி சிறிய அவசர தேவைக்குத்தான் உதவும்.
கடன் வாங்கும்போதும், நல்ல கடன் (வீட்டுக் கடன், கல்விக் கடன்) பெறலாம், கிரெடிட் கார்டுகளைக் கொண்டு அதிக வட்டியில் பெறும் கடன்களைத் தவிர்க்கலாம்.
அடுத்து, பெண்கள் பணியாற்றும் இடங்களில் பல நேரங்களில் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த தயங்குகிறார்கள்; ஆனால், ஒருவர் தங்களுக்குத் தகுதியானதைக் கேட்க முயற்சி செய்ய வேண்டும்.
வாங்கும் சம்பளத்தை சரியான முறையில் முதலீடு செய்யவும் முயல வேண்டும். பொதுவாகவே வங்கி வைப்புகளைத்தான் பெரும்பாலானோர் நம்புகிறார்கள். ஆனால் முதலீடு என்பது பல பெண்கள் தயங்கும் இடமாகவே உள்ளது.
காம்பவுண்ட் இன்டிரஸ்ட் எனப்படும் கூட்டு வட்டி முறை எப்போதும் சிறந்ததுதான். பெரிய தொகையாக இருந்தால் நல்ல வட்டி கிடைக்கும். அதேவேளையில், பங்குகள், பத்திரங்கள், பரஸ்பர நிதிகள் அல்லது பங்குச் சந்தைகள் என பல வழிகளில் பணத்தை முதலீடு செய்வது குறித்து அறிந்துகொள்வது நல்லது.
அண்மைக் காலமாக, பங்குச் சந்தை உள்ளிட்ட துறைகளில் சில பெண்கள் பெரிய அளவில் முதலீடுகளை செய்து அது குறித்து மற்றவர்களுக்கும் கற்பித்து வருகிறார்கள். எனவே பங்குச் சந்தை உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமான வேலை அல்ல.
அவ்வாறே முதலீடு என்று வந்துவிட்டாலும், பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பான போர்ட்ஃபோலியோக்களைத் தேர்வு செய்கிறார்கள், அல்லது நிதி ஆலோசகரின் சொல்படி செய்கிறார்கள். தரவுகள் சொல்வது என்னவென்றால், பெண்கள் உறுதியான நீண்ட கால பங்குகளைத் தேர்வு செய்கிறார்கள். இதனால், ஆண்கள் அடையும் லாபத்தை, பெண்கள் அடைய அதிக காலம் ஆகிறது.
எனவே, பெண்கள், ஓய்வூதிய கணக்கு, வருங்கால வைப்பு நிதி போன்ற திட்டங்களில் முதலில் சேமிக்க வேண்டும். வருமானத்தில் குறைந்தது 25 சதவிகிதத் தொகையை சேமிக்க இலக்காகக் கொள்ளுங்கள்.
எப்போதும் 50 வயதுக்குப் பிறகான செலவுகளை நோக்கி திட்டமிடுங்கள். அதுதான், வாழ்க்கையின் நிறைவு காலத்தை இனிதாகக் கழிக்க உதவும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
இதில் இன்னமும் சோகம் என்னவென்றால், பல திருமணமான பெண்கள் கூட்டுக் கணக்குகள் அல்லது தங்கள் துணையின் ஓய்வூதியம் பற்றி அதிகம் அறிந்து வைத்துக்கொள்ளவில்லை என்பதையே தாமதமாகத்தான் உணர்கிறார்கள்.
பணி புரியும் பெண்களோ, வீட்டிலிருக்கும் பெண்களோ, முதலில், நிதி விஷயத்தில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்துங்கள். வீட்டுச் செலவு உள்ளிட்ட நிதிகளை ஒன்றாக அமர்ந்து பேசி புரிந்து கொள்ளுங்கள். பல்வேறு நிதி மற்றும் சொத்து தொடர்பான முடிவுகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடிவெடுக்கலாம்.
முதலில், உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்காக முதலீடு செய்யுங்கள். வருமானம் - செலவு மற்றும் சேமிப்புக்கு இடையே இருக்கும் இடைவெளிகளை நிரப்ப, சரியான நிதி மேலாண்மையைக் கையாளுங்கள். எப்போதும் ஒரே ஒரு வேலையை நம்பியிராமல் மாற்று வேலை வாய்ப்புகளை வைத்துக் கொள்ளுங்கள்.
புத்தகங்கள், விடியோக்கள், நேர்காணல்கள் மூலம் நிதி மேலாண்மை குறித்து தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். நம்பிக்கையை வளர்க்க, குழுவாக முதலீடு தொடர்பான ஆலோசனைகளில் பங்கேற்றுக் கொள்ளுங்கள். சிறு தொகையை முதலீடு செய்து பாருங்கள். தோற்றாலும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டிருப்பீர்கள்.
நிதி சுதந்திரம் என்பது சாதனை படைக்க வேண்டும் என்பது பற்றியது அல்ல; அது சீரான வருவாய் மற்றும் முன்னேற்றத்தைப் பற்றியது.
ஒருவர் தன்னுடைய 40 வயதுக்குள் கடன்களை திருப்பிச் செலுத்துதல் மற்றும் ஓய்வூதியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 50 வயதுக்குள், சேமிப்பு, நிதிப் பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
60 வயதுக்குள் தன்னுடைய உடல் நலம், மன நலம், சீரான வாழ்வு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இந்த பட்டியல்படி திட்டமிட வயதோ வருமானமோ தடையில்லை. உங்கள் வயது அல்லது வருமானம் எதுவாக இருந்தாலும் இன்றே தொடங்குங்கள். உங்கள் நிதித் துறைக்கு நீங்களே அமைச்சராகுங்கள். அறிவு, தடைகளை வாய்ப்புகளாக மாற்றும். எனவே "நான் செய்திருந்தால்" என்பதை "நான் செய்தேன்" என்று மாற்றுங்கள்.
பெண்கள் நிதி நிலைமையில் செழிப்படையும்போது, அவர்கள் மட்டுமல்ல, அவர்களுடன் அவர்களது குடும்பமும் சமூகமும் உயர்வடைகின்றன.
- பி.வி. சுப்ரமணியம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...