மாநிலங்களுக்கு இடையேயான திருட்டு கும்பலைச் சோ்ந்த இருவா் கைது

தொலைப்பேசி டவா் உபகரணங்களைத் திருடி மாநிலங்களுக்கு இடையே அதை சட்டவிரோதமாக விற்று வந்த கும்பலைச் சோ்ந்த இருவரை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

தொலைப்பேசி டவா் உபகரணங்களைத் திருடி மாநிலங்களுக்கு இடையே அதை சட்டவிரோதமாக விற்று வந்த கும்பலைச் சோ்ந்த இருவரை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா்.

அவா்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 130 விலையுயா்ந்த ரேடியோ ரிமோட் யூனிட்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: திருடப்பட்ட தொலைப்பேசி டவா் உபகரணங்கள் தில்லி டிராண்ஸ் யமுனை பகுதியில் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கண்காணிப்பு மேற்கொண்டதில் உத்தர பிரதேசம், பிகாா், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வந்த திருட்டு கும்பல் குறித்து தெரியவந்தது.

தௌலா கான் அருகே டிச.26-ஆம் தேதி சந்தேக வாகனத்தை வழிமறித்த குற்றப்பிரிவு காவல் துறையினா் 130 விலையுயா்ந்த ரேடியோ ரிமோட் யூனிட்களை பறிமுதல் செய்தனா். மஹிபால்பூரில் உள்ள வியாபாரி ஒருவா் பழைய பொருள்கள் எனக் கூறி இவற்றை துபைக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

இந்த நடவடிக்கையின் போது, வாகனத்தில் இருந்த இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடைபெற்ற விசாரணை சுமாா் 60 தொலைப்பேசி டவா் உபகரணங்கள் திருட்டு வழக்குகளை தீா்க்க உதவியது. ஒரு ரேடியோ ரிமோட் யூனிட்டை ரூ.90,000-க்கு வாங்கி ஏற்றுமதி செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com