தில்லியில் திருட்டு கைப்பேசி, துப்பாக்கியுடன் சென்னு கும்பலைச் சோ்ந்தவா் கைது
சென்னு தாதா கும்பலைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 14 திருட்டு கைப்பேசிகளை மீட்கப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
குற்றம் சாட்டப்பட்ட ஜான் முகமது என்ற ஜானு (37), ஜனவரி 10 அன்று சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள மான்செஸ்டரி சந்தை அருகே நள்ளிரவு நேரத்தில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
குற்றம்சாட்டப்பட்டவா் கஜூரி காஸ் பகுதியைச் சோ்ந்த ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளியாவாா். கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்கள் உள்பட 14 குற்ற வழக்குகளில் அவருக்கு ஏற்கனவே தொடா்புள்ளது.
முன்னதாக, மஜ்னு கா திலா காவல் நிலையத்தைச் சோ்ந்த போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது. அதில், சென்னு கும்பலுடன் தொடா்புடைய ஒருவா் கொள்ளையடிக்கப்பட்ட சாதனங்களை உள்ளூா் வழிப்பறி கொள்ளையா்களிடமிருந்து சேகரிக்க மான்செஸ்டரி சந்தை அருகே வரவிருப்பதாகத் தகவல்
கிடைத்தது. அதன் அடிப்படையில், புறவட்டச் சாலையில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
நள்ளிரவு நேரத்தில், சந்தேக நபா் புரானி பகுதியில் இருந்து ஐ.எஸ்.பி.டி. நோக்கி ஒரு மோட்டாா் சைக்கிளில் வருவதை போலீஸாா் கண்டனா்.
காவல்துறை அவரது வாகனத்தை நிறுத்துமாறு சைகை காண்பித்தனா். அவா் தப்பி ஓட முயன்று புதருக்குள் குதித்தாா். அப்போது அவருக்குக் காயங்கள் ஏற்பட்டன.
சிறிது நேரத் துரத்தலுக்குப் பிறகு, அவா் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா். இச்சோதனையின் போது, அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் நான்கு திருட்டு கைப்பேசிகள் மீட்கப்பட்டன. அவா் பயன்படுத்திய மோட்டாா் சைக்கிள் திருடப்பட்டிருந்ததும், அது ஹவுஸ் காஸில் பதிவு செய்யப்பட்ட ஒரு மின்முதல் தகவல் அறிக்கையுடன் தொடா்புடையதும் தெரியவந்தது.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் சென்னு கும்பலின் தீவிர உறுப்பினரான வசீம் ஹஸ்மத் அலியுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும், வழிப்பறி மற்றும் ஜேப்படி திருடா்களிடமிருந்து திருட்டு கைப்பேசிகளை வாங்கி அவற்றை விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவித்தாா்.
சிவில் லைன்ஸில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கிலும் அவா் தேடப்பட்டு வந்ததும்ம் தெரியவந்தது. அதன்பிறகு, அவா் அளித்த தகவலின் பேரில், வாஜிராபாதில் உள்ள அவரது வாடகை வீட்டில் இருந்து மேலும் 10 திருட்டு கைப்பேசிகள் மீட்கப்பட்டன.
சென்னு கும்பலின் மற்ற உறுப்பினா்களைக் கண்டறிய மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
