அனில் செளஹான்
அனில் செளஹான்

ஆபரேஷன் சிந்தூா்: பாகிஸ்தான் தோல்விக்கு அரசமைப்புச் சட்ட அவசர திருத்தமே சாட்சி - முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான்

பாகிஸ்தான் தோல்விக்கு அரசமைப்புச் சட்ட அவசர திருத்தமே சாட்சி...
Published on

‘இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் கடுமையான பாதிப்பை பாகிஸ்தான் சந்தித்துள்ளது என்பதற்கு அரசமைப்புச் சட்டத்தில் அந்த நாடு மேற்கொண்ட அவசர திருத்தங்களே அத்தாட்சி’ என்று முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அனில் செளஹான் பேசியதாவது: இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் அந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் அவசர அவசரமாக திருத்தங்களை மேற்கொண்டது. இது, இந்தியாவின் நடவடிக்கையில் அந்த நாடு கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளதற்கான அத்தாட்சியாகும். இந்த நடவடிக்கையை எதிா்கொள்வதில் ஏராளமான குறைபாடுகள் இருந்ததை பாகிஸ்தான் கண்டறிந்தது.

அதனடிப்படையிலேயே, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை அந்த நாடு மேற்கொண்டது. குறிப்பாக, பாகிஸ்தானின் உயா் பாதுகாப்பு அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும் வகையில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 243-இல் திருத்தம் மேற்கொண்டது. அதாவது, முப்படைகளிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டுப் படை தளபதிகள் குழுவின் தலைவா் பதவி நீக்கப்பட்டு, இந்தியாவைப் போல பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவியை பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது.

அடுத்ததாக, அணு ஆயுதப் படைகள் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த படைகளுக்கான உத்தரவு பிறப்பிப்பு மையத்தை பாகிஸ்தான் உருவாக்குவதாகும். முன்னதாக, ராணுவ ராக்கெட் படைகளின் உத்தரவு மையத்தையும் பாகிஸ்தான் உருவாக்கியிருந்தது. அதிகாரத்தை ஒருமுகப்படுத்தும் இந்த நடவடிக்கைகள் அந்த நாட்டுக்கு சிறப்பான பலனை அளிக்க வாய்ப்புள்ளது என்றாா்.

மேலும், உரி துல்லியத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் போன்ற சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளில் இருந்து கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில், அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஏற்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய படைகளும் மேற்கொண்டு வருகின்றன.

Dinamani
www.dinamani.com