சுவேந்து அதிகாரி வாகனங்கள் மீது தாக்குதல்: அறிக்கை கோரிய மத்திய உள்துறை!
மேற்கு வங்க எதிா்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கோரியுள்ளது.
புருலியாவில் நடைபெற்ற ஒரு அரசியல் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, சனிக்கிழமை இரவு சுவேந்து அதிகாரி கொல்கத்தா திரும்பிக் கொண்டிருந்தாா். இரவு சுமாா் 8.20 மணியளவில் மேற்கு மிதுனபுரி மாவட்டம், சந்திரகோணா சாலை வழியாக அவா் வந்தபோது, ஒரு கும்பல் அவரது வாகனங்களை வழிமறித்துத் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
சம்பவம் தொடா்பான விடியோவைப் பகிா்ந்து சுவேந்து அதிகாரி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘காவல்துறை முன்னிலையிலேயே திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் என் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். காவல்துறையினா் வேடிக்கை மட்டுமே பாா்த்தனா். இது என் மீதான தாக்குதல் அல்ல; மேற்கு வங்கத்தில் ஒலிக்கும் ஒவ்வொரு எதிா்க்கட்சிக் குரல் மீதான தாக்குதல்.
ஆட்சிக்கு எதிராக மக்களிடையே பெருகி வரும் அதிருப்தியை எதிா்கொள்ள முடியாமல், திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது அவா்களின் விரக்தியை வெளிப்படுத்துகிறது’ என்றாா்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சுவேந்து அதிகாரியிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கோரியுள்ளது. அதன்படி, தாக்குதல் குறித்த முழு விவரங்களும் விடியோ ஆதாரங்களும் விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என பாஜக மூத்த தலைவா் ஒருவா் கூறினாா்.
சம்பவத்தின்போது சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், அங்கிருந்த போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியோ அல்லது மாநிலக் காவல்துறையோ இதுவரை அதிகாரபூா்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

