

குஜராத் மாநிலம், பிரபாஸ் பட்டன் பகுதியில் அமைந்துள்ள சோம்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜன. 11) சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
நாட்டில் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்க திருத்தலங்களில் ஆதி ஜோதிர்லிங்கமாக விளங்கும் சோம்நாத் கோயில் மீது கடந்த 1026-ஆம் ஆண்டில் முகலாய படையெடுப்பாளர் கஜினி முகமது முதல் முறையாகத் தாக்குதல் நடத்தி, பெரும் செல்வங்களைக் கொள்ளையடித்தார். அதன் பிறகு முகலாய படையெடுப்பாளர்களால் சோம்நாத் கோயில் பலமுறை சூறையாடப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சர்தார் வல்லபபாய் படேல் உள்ளிட்ட தலைவர்களின் முயற்சியால் கடந்த 1951-இல் சோம்நாத் கோயில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது.
கஜினி முகமது தாக்குதல் நடத்தி 1,000 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், சோம்நாத் கோயில் கம்பீரமாக மீண்டெழுந்ததைக் கொண்டாடும் 4 நாள் சுயமரியாதை திருவிழா (சோம்நாத் ஸ்வாபிமான் பா்வ்) வியாழக்கிழமை தொடங்கியது.
நிறைவு நாளான இன்று (ஜன. 11) சிறப்புப் பூஜைகளில் பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு மேற்கொண்டார். இதற்காக இன்று காலை சோம்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி, திறந்தவெளி வாகனத்தில் சென்றார். அங்கு கூடியிருந்த மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
சோம்நாத் கோயில் தாக்குதல் நடத்தப்பட்டு 1,000 ஆண்டுகள் ஆனதை நினைவுகூர்ந்து, பிரதமா் மோடி அண்மையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.