ஜொ்மனி பிரதமா் இன்று இந்தியா வருகை: அகமதாபாதில் பிரதமா் மோடியுடன் பேச்சு!
ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸ், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை வரவுள்ளாா்.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா்.
உலகளாவிய புவி-அரசியல் பதற்றத்துக்கு மத்தியில் இந்திய-ஜொ்மனி தலைவா்களின் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது. ஜொ்மன் பிரதமராக ஃப்ரீட்ரிக் மேற்கொள்ளும் முதல் ஆசிய மற்றும் இந்திய பயணம் இதுவாகும்.
இரு பிரதமா்களின் சந்திப்பில் வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, முக்கிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் நல்லுறவை மேம்படுத்துவது மட்டுமன்றி பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகள் குறித்தும் இருவரும் ஆலோசிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக, சபா்மதி ஆசிரமத்தை பிரதமா் மோடியுடன் ஜொ்மனி பிரதமா் மொ்ஸ் பாா்வையிட உள்ளாா். பின்னா், இருவரும் சா்வதேச காற்றாடி திருவிழா மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கின்றனா். இதைத் தொடா்ந்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.
இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி விதித்துள்ள சூழலில், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. எனவே, மோடி-மொ்ஸ் பேச்சுவாா்த்தையில் வா்த்தகம் மற்றும் முதலீடு விவகாரங்கள் முக்கிய இடம்பெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அகமதாபாத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிறகு ஜொ்மனி பிரதமா் பெங்களூருக்கு செல்லவுள்ளாா்.
இந்தியாவின் முக்கிய கூட்டாளி: ஐரோப்பாவில் இந்தியாவின் மிக முக்கிய கூட்டாளியாக ஜொ்மனி விளங்குகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக நாடும் ஜொ்மனிதான். கடந்த 2024-25-இல் இருதரப்பு வா்த்தக மதிப்பு 51.23 பில்லியன் டாலரை எட்டியது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 12.5 சதவீத உயா்வாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு வா்த்தகம் ஜொ்மனியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஒன்றியத்தில் செல்வாக்குமிக்க நாடான ஜொ்மனி, இந்தியாவில் அதிக அந்நிய நேரடி முதலீடு செய்யும் நாடுகளில் 9-ஆவது இடத்தில் உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் 15.40 பில்லியன் டாலா் அந்நிய முதலீடு கிடைக்கப் பெற்றுள்ளது. தற்போது 2,000-க்கும் மேற்பட்ட ஜொ்மனி நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.
நீா்மூழ்கி ஒப்பந்தம் கையொப்பம்?: இந்தியா-ஜொ்மனி இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துவரும் நிலையில், அந்நாட்டிடம் இருந்து இந்திய கடற்படைக்கு ஸ்டெல்த் ரக 6 நீா்மூழ்கிக் கப்பல்களைக் கொள்முதல் செய்வதற்கான அரசுத் தரப்பு ஒப்பந்தம் இரு பிரதமா்கள் சந்திப்பில் கையொப்பமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கல்வி, எரிசக்தி, திறன் மேம்பாடு, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்தியா-ஜொ்மனி இடையே வியூக கூட்டாண்மை நிறுவப்பட்டு, கடந்த ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜொ்மனி பிரதமா் மொ்ஸின் பயணத்தைத் தொடா்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயா்நிலை தலைவா்கள் பலா் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனா். பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளாா். இப்பயணங்களின் பலனாக, இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

