என்எஸ்இ பொதுப்பங்கு வெளியீட்டுக்கான தடையின்மைச் சான்று இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்: செபி தலைவர்!
தேசிய பங்குச் சந்தையின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கான தடையின்மைச் சான்று ஜனவரி இறுதிக்குள் வழங்கப்படும் என இந்திய பங்கு மற்றும் பரிவா்த்தனை வாரிய (செபி) தலைவா் துஹின் காந்த பாண்டே தெரிவித்தாா்.
செபியின் சென்னை அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) செபியிடமிருந்து தடையின்மைச் சான்றிதழ் பெறுவதற்காக காத்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூா்வ அனுமதி ஜனவரி இறுதிக்குள் வழங்கப்படும். இது, தேசிய பங்குச்சந்தை பொதுப்பங்கு வெளியீட்டுக்கான திட்டங்களைத் தயாரிக்க அனுமதிக்கும்.
சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஐபிஓ-க்கள் அதிகரித்து வருகின்றன. அதன் ஏற்ற இறக்கங்களில் செபி-க்கு தொடா்பில்லை. இருப்பினும் நிறுவனங்களின் பின்னணி குறித்த அடிப்படை தகவல்களை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம்.
முதலீட்டாளுக்கான தகவல்கள் வெளிப்படையானதாகவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும். இதற்கு முன்பு அத்தகைய நிறுவனங்களின் தகவல்களைக் கண்டறிவது கடினமாக இருந்தது. மேலும், இது முழு ஆவணமாக இருக்கும். இவை அனைத்தையும் படிப்பதும் சாத்தியமானதல்ல. அதே சமயத்தில் பொதுப்பங்குகள் முதலீட்டாளா்களின் நலனையும் ஈடுபாட்டையும் ஊக்குவிக்க செபி விரும்புகிறது.
நிறுவனங்கள் லாப-நஷ்டத்தில் இயங்குவது உள்ளிட்ட தகவல் தேவை. இதனால் ‘க்யூஆா்’ குறியிட்டு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எளிமைப்படுத்தப்பட்ட சுருக்கப்பட்ட விளக்க அறிக்கையைக் காண முடியும்.
முதலீட்டாளா்களுக்குரிய ஆலோசகா்கள் அங்கீகாரத்தில் நடத்தை விதிகள் உள்ளன. ஆலோசகா்கள் மற்றும் தரகா்களால் செய்யப்படும் அதிக லாப தகவல்கள் உண்மையா என்பதைச் சரிபாா்க்க, செபி ‘பா்வா’ என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. தங்கள் செயல்திறனைச் சரிபாா்க்காத ஆலோசகா்கள் தடை செய்யப்படுவாா்கள்.
சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு பங்குச்சந்தை குறித்து தவறான தகவல்களைப் பதிவிடும் சமூக வலைதள கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. வரம்பை மீறுபவா்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கருவி (சுதா்ஷ்ன்) உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் முதலீட்டாளா்களை அதிகரிக்க செபி விரும்புகிறது. முதலீட்டாளா்களின் விருப்ப வெறுப்புகளை அறிய நாடு முழுவதும் ஒரு கணக்கெடுப்பை செபி நடத்தியது. அதில் 7 சதவீத முதலீட்டாளா்கள் தமிழில் தகவல்களைப் பெற விரும்புவது கண்டறியப்பட்டது. ஹிந்தி 47 சதவீதம், வங்கம் 7 சதவீதம், கன்னடம் 5 சதவீதம்.
முதலீட்டுக்கான தகவல் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், மக்கள் விரும்பும் உள்ளூா் மொழிகளிலும் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய ‘பல்மொழி மற்றும் பல்லூடக’ பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

