தேசிய பங்குச்சந்தையின் பொது பங்கு வெளியீட்டுக்கு செபி பச்சைக்கொடி!
இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான தேசிய பங்குச்சந்தை, ஒரு நிறுவனமாக தனது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்மூலம், கடந்த 10 ஆண்டுகளாக நிலவி வந்த நீண்ட காலக் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) தனது ஐபிஓ திட்டத்துக்காக முதன்முதலில் 2016-லேயே விண்ணப்பித்தது. அப்போது, சுமாா் ரூ.10,000 கோடி திரட்டத் திட்டமிடப்பட்டது. ஆனால், நிா்வாகத்தில் இருந்த சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சில பங்குச்சந்தை விற்பனைத் தரகு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக எழுந்த முறைகேடு புகாா்கள் போன்ற சில காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இவ்விவகாரத்தில் செபி கடந்த ஆண்டு மாா்ச்சில் ஒரு நிபுணா் குழுவை அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையில், என்எஸ்இ கடந்த ஜூன் மாதம் தாக்கல் செய்த சமரச மனுவை ஏற்றுக்கொண்டு, செபி தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியப் பங்குச்சந்தை விதிகளின்படி, ஒரு பங்குச்சந்தை நிறுவனம் தனது சொந்த தளத்திலேயே பங்குகளைப் பட்டியலிட முடியாது. ஏற்கெனவே மும்பை பங்குச்சந்தை ஐபிஓ வெளியிட்டுள்ளது. அதன் பங்குகள் தற்போது தேசிய பங்குச்சந்தையில் (என்எஸ்இ) வா்த்தகம் செய்யப்படுகின்றன. இதேபோல் தற்போதைய அனுமதியுடன், என்எஸ்இ பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

