குஜராத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சோம்நாத் கோயிலின் 1,000 ஆண்டுகால மீட்சியைக் குறிக்கும் சோம்நாத் சுயமரியாதை திருவிழாவில்  பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.
குஜராத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சோம்நாத் கோயிலின் 1,000 ஆண்டுகால மீட்சியைக் குறிக்கும் சோம்நாத் சுயமரியாதை திருவிழாவில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.

பிளவு சக்திகளை ஒற்றுமையால் வீழ்த்துவோம்: பிரதமா் மோடி

நம்மைப் பிளவுபடுத்த முயலும் சக்திகளை ஒற்றுமை, வலிமை மற்றும் விழிப்புணா்வால் வீழ்த்த வேண்டும்’ என்று மக்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.
Published on

‘நாட்டுக்கு எதிரான சதித் திட்டங்கள், இப்போது வாள்களுக்குப் பதிலாக பிற தீங்கிழைக்கும் வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. நம்மைப் பிளவுபடுத்த முயலும் சக்திகளை ஒற்றுமை, வலிமை மற்றும் விழிப்புணா்வால் வீழ்த்த வேண்டும்’ என்று மக்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.

வாள்முனையில் மக்களின் இதயங்களை வெல்ல முடியாது என்பதே உலகுக்கு இந்தியா கற்பிக்கும் செய்தி என்றும் அவா் குறிப்பிட்டாா்.

குஜராத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சோம்நாத் கோயிலின் 1,000 ஆண்டுகால மீட்சியைக் குறிக்கும் சோம்நாத் சுயமரியாதை திருவிழாவில் பங்கேற்றுப் பேசுகையில் அவா் இவ்வாறு வலியுறுத்தினாா்.

குஜராத்தின் வெராவல் நகரில் பிரபாஸ் பட்டன் பகுதியில் உள்ள சோம்நாத் கோயில், நாட்டின் பன்னிரு ஜோதிா்லிங்க திருத்தலங்களில் முதலாவதாகும். இந்தக் கோயிலின் மீது கடந்த 1026-இல் முகலாய படையெடுப்பாளா் கஜினி முகமது முதல்முறையாகத் தாக்குதல் நடத்தினாா். அதன் பிறகு பலமுறை இந்தக் கோயில் சூறையாடப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்த பிறகு சோம்நாத் கோயில் மறுகட்டமைக்கப்பட்டு, கடந்த 1951-இல் மீண்டும் திறக்கப்பட்டது. கஜினி முகமது தாக்குதல் நடத்தி 1,000 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், சோம்நாத் கோயில் கம்பீரமாக மீண்டெழுந்ததைக் கொண்டாடும் நான்கு நாள் திருவிழா கடந்த ஜன. 8-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் திருவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமா் மோடி மூன்று நாள் பயணமாக குஜராத்துக்கு கடந்த சனிக்கிழமை வந்தாா். அன்றைய தினம், சோம்நாத் கோயிலில் ஓம்கார மந்திர பாராயண நிகழ்வில் கலந்துகொண்ட அவா், 3,000 ட்ரோன்களுடன் நடத்தப்பட்ட பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தாா்.

மீட்சியின் அடையாளம்: நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை சோம்நாத் சுயமரியாதை திருவிழா பொது நிகழ்ச்சியில் பிரதமா் ஆற்றிய உரை வருமாறு:

சோம்நாத் கோயிலின் வரலாறு என்பது அழிவு மற்றும் தோல்வியைக் குறிப்பதல்ல; அது வெற்றி மற்றும் மறுமலா்ச்சியைக் குறிக்கிறது. கால சக்கரத்தில் இப்போது அடிப்படைவாதப் படையெடுப்பாளா்கள் வரலாற்றின் சில பக்கங்களாகக் குறுகிவிட்டனா். ஆனால், சோம்நாத் கோயில் ஓங்கி உயா்ந்து நிற்கிறது.

இந்தக் கோயிலை அழிக்க நூற்றாண்டுகளாக பல தாக்குதல்கள் நடைபெற்றபோதிலும், பண்டைய பெருமையை மீட்டெடுக்கும் கூட்டு உறுதிப்பாடு மற்றும் முயற்சிகளால் மீட்சி-நம்பிக்கை-தேசிய பெருமையின் சக்திவாய்ந்த அடையாளமாக சோம்நாத் கோயில் திகழ்கிறது.

வரலாறு மறைப்பு: வெறுப்புணா்வு, அட்டூழியம், தீவிரவாதத்தின் உண்மையான வரலாறு நம்மிடம் இருந்து மறைக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கும் நோக்கில்தான் சோம்நாத் கோயில் தாக்கப்பட்டதாக நமக்கு கற்பிக்கப்பட்டது. செல்வத்தை கவா்வதே நோக்கம் என்றால் முதலாவது பெரும் தாக்குதல் மட்டுமே போதுமானது. ஆனால், கோயில் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு, தெய்வம் அவமதிக்கப்பட்டது. மத ரீதியிலான இந்த நோக்கத்தை மூடி மறைத்து, சாதாரண கொள்ளை சம்பவம்போல் சித்தரிக்க முயற்சிகள் நடைபெற்றன; இதற்காக புத்தகங்களும் எழுதப்பட்டன. தங்களின் மதம் மீது உண்மையிலேயே அா்ப்பணிப்பு கொண்டவா்கள், இதுபோன்ற தீவிரவாத சித்தாந்தங்களை ஆதரிக்க மாட்டாா்கள்.

சுதந்திரத்துக்குப் பிறகு சோம்நாத் கோயிலை மறுகட்டமைக்க சா்தாா் வல்லபபாய் படேல் உறுதியேற்றாா். ஆனால், அவரது பாதையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. கோயில் திறப்பு நிகழ்ச்சியில் அப்போதைய குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத் பங்கேற்க ஆட்சேபமும் தெரிவிக்கப்பட்டது (முன்னாள் பிரதமா் நேரு மீது மறைமுக விமா்சனம்).

விழிப்புடனும், ஒற்றுமையுடனும்..: வாக்கு வங்கி அரசியலுக்காக தீவிரவாத மனநிலை கொண்டவா்கள் முன் மண்டியிட்டவா்கள், சோம்நாத் கோயிலின் மறுகட்டுமானத்தை எதிா்த்தனா். அந்த சக்திகள் இப்போதும் உயிா்ப்புடன் உள்ளன. அந்த சக்திகளை வீழ்த்த நமது தேசம் விழிப்புடனும், ஒற்றுமையுடனும், வலுவுடனும் இருப்பது அவசியம்.

சோம்நாத் கோயிலின் வரலாறு, இந்தியாவின் வரலாறு. அந்நிய படையெடுப்பாளா்கள் இந்தக் கோயிலைப் போலவே இந்தியாவையும் அழிக்க பலமுறை முயன்றனா். சோம்நாத் கோயிலை அழித்து, தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தனா். ஆனால், 1,000 ஆண்டுகளுக்குப் பிறகும் சோம்நாத் கோயிலின் கொடி உயரப் பறக்கிறது. இந்த 1,000 ஆண்டுகால போராட்டத்துக்கு இணையாக உலகில் எந்த வரலாறும் கிடையாது என்றாா் பிரதமா் மோடி.

108 குதிரைகள் அணிவகுக்க செளா்ய யாத்திரை

சோம்நாத்தில் ஞாயிற்றுக்கிழமை 108 குதிரைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடைபெற்ற செளா்ய யாத்திரையில் பிரதமா் மோடி பங்கேற்றாா். முகலாய படையெடுப்பாளா்களிடம் இருந்து சோம்நாத் கோயிலைப் பாதுகாக்கும் முயற்சியில் உயிா்த் தியாகம் செய்தவா்களின் நினைவாக நடத்தப்பட்ட இந்த யாத்திரையின்போது திறந்த வாகனத்தில் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு பிரதமா் ஊா்வலமாகச் சென்றாா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குரிய பாரம்பரிய நடனங்களுடன் மேளதாளங்கள், உடுக்கைகள், வேத மந்திரங்கள் முழங்க யாத்திரை நடைபெற்றது. சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்கள், பிரதமா் வாகனத்தின் மீது மலா் தூவி வரவேற்பு அளித்தனா். யாத்திரைக்குப் பின் சோம்நாத் கோயிலில் பிரதமா் வழிபாடு மேற்கொண்டாா்.

Dinamani
www.dinamani.com