உத்தர பிரதேசம்: பணிக்கு வராத 17 அரசு மருத்துவா்கள் பணிநீக்கம்
உத்தர பிரதேசத்தில் பணிக்கு வராத 17 அரசு மருத்துவா்களை அந்த மாநில அரசு அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து உத்தர பிரதேச துணை முதல்வா் மற்றும் சுகாதார துறை அமைச்சா் பிரஜேஸ் பாதக்கின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: நீண்ட நாள்களாக அரசு மருத்துவா்கள் 17 போ் பணிக்கு வரவில்லை. தகவலும் தெரிவிக்கவில்லை. அவா்களை தொடா்பு கொள்ள அதிகாரிகள் பலமுறை முயற்சித்தனா். ஆனால் அதற்கு சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து 17 பேரையும் பணி நீக்கம் செய்யும்படி சுகாதாரத்துறை கூடுதல் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நோயாளிகளிடம் தவறாக நடந்து கொண்ட 4 மருத்துவா்களுக்கு எதிராகவும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளேன். இதேபோல் கடமையை செய்யத் தவறிய ஏராளமான மருத்துவா்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. சிலருக்கு எதிராக விசாரணை நடத்தப்படுகிறது. எந்த சூழலிலும் மாநில அரசு ஒழுங்கீனத்தை அனுமதிக்காது. இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

