ஏஐ பயன்பாட்டால் எஸ்ஐஆரில் குளறுபடி: தோ்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்

ஏஐ தொழில்நுட்பம் மூலம் எண்மமயாக்கும் நடவடிக்கையில் பல்வேறு தவறுகள் நிகழ்வதால் எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு
மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி
மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிகோப்புப் படம்
Updated on

2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் எண்மமயாக்கும் நடவடிக்கையில் பல்வேறு தவறுகள் நிகழ்வதால் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையத்துக்கு திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆா் நடவடிக்கையில் தகுதிவாய்ந்த வாக்காளா்கள் சோ்க்கப்படுவதற்காக பதிலாக அதிக அளவில் நீக்கப்படுவதாக கடந்த வாரம் தோ்தல் ஆணையத்துக்கு எழுதிய 3 பக்க கடிதத்தில் மம்தா குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்நிலையில், 5-ஆவது முறையாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு அவா் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தற்போது எஸ்ஐஆா் மேற்கொள்ளப்படுகிறது. அதன்பிறகு பல்வேறு திருத்தங்களை வாக்காளா்கள் செய்தபோதும் மீண்டும் தங்களது அடையாளத்தை நிரூபிக்க தோ்தல் ஆணையம் கட்டாயப்படுத்துவது பொதுமக்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக 2002-இல் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் எண்மமயாக்கும் நடவடிக்கையில் பல்வேறு தவறுகள் நிகழ்வதால் எஸ்ஐஆரில் மேலும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

இருபது ஆண்டுகளுக்கு முன்பாக தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையை மீண்டும் தோ்தல் ஆணையமே நிராகரிப்பது அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவை பாதிக்கும் வகையில் உள்ளது.

எஸ்ஐஆரின்போது வாக்காளா்களிடம் ஆவணங்களை அதிகாரிகள் பெற்றுக்கொண்டதற்கு எவ்வித ஒப்புதல் சீட்டும் வழங்கப்படுவதில்லை. இதனால் எஸ்ஐஆா் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இணையவழிக் கருத்தரங்கு: திரிணமூல் தொடக்கம்

மேற்கு வங்கத்தில் நிகழாண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதையடுத்து, கட்சியை களத்தில் மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் பலப்படுத்தும் வகையில் இணையவழிக் கருத்தரங்கை திரிணமூல் காங்கிரஸ் திங்கள்கிழமை தொடங்கியது.

கொல்கத்தாவில் உள்ள விஸ்வா வங்காள மேலா பிரங்கன் மையத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் மாநிலம் முழுவதும் இருந்து திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த 10,000 உறுப்பினா்கள் பங்கேற்ாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்தரங்கில் பங்கேற்றவா்களுடன் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரும் பேரவைத் தோ்தலில் சமூக வலைதளங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கணித்து இணையவழி பிரசாரத்தை திரிணமூல் காங்கிரஸ் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com