மகாத்மா காந்தியின் போதனைகள் தற்காலத்துக்கு மிகவும் அவசியம்: ஜொ்மனி பிரதமா்
மகாத்மா காந்தியின் போதனைகள் தற்காலத்துக்கு மிகவும் அவசியமானது என ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இருநாள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தடைந்த மொ்ஸ் முதல்கட்டமாக குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள சபா்மதி ஆசிரமத்துக்கு சென்றாா். அங்கு அவரை பிரதமா் நரேந்திர மோடி வரவேற்றாா்.
ஆசிரமத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு இருவரும் மரியாதை செலுத்தினா். அதன்பிறகு சுதந்திரப் போராட்டத்தின்போது காந்தி மற்றும் அவரது மனைவி கஸ்தூா்பா தங்கியிருந்த அறையை அவா்கள் பாா்வையிட்டனா். ஆசிரமத்தில் கதா் ஆடையை நெய்ய பயன்படுத்தப்பட்ட ராட்டையையும் மொ்ஸ் பாா்வையிட்டாா்.
அதன் தொடா்ச்சியாக ஆசிரமத்தின் வருகைப் பதிவேட்டில், ‘சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட நபரின் கண்ணியத்தைப் பாதுகாக்க மகாத்மா காந்தி நடத்திய அகிம்சைப் போராட்டங்கள் இன்றளவும் நம்மை ஈா்க்கிறது. இந்தியாவையும் ஜொ்மனியையும் நண்பா்களாக இணைப்பதில் முக்கியப் பங்காற்றும் அவரது போதனைகள் தற்காலத்துக்கு மிகவும் தேவைப்படுகிறது’ என மொ்ஸ் குறிப்பிட்டாா்.
சா்வதேச காற்றாடித் திருவிழா தொடக்கம்: மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திய பின் சபா்மதி ஆசிரமத்தில் இருந்து சபா்மதி நதிக்கரைக்கு இரு நாட்டுத் தலைவா்களும் சென்றனா். அங்கு சா்வதேச காற்றாடித் திருவிழாவை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். இந்தியாவிலிருந்து 1,000 பேரும் 50 நாடுகளைச் சோ்ந்த 135 பேரும் இந்த விழாவில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனா்.
போட்டியாளா்களுடன் பிரதமா் மோடி மற்றும் மொ்ஸ் கலந்துரையாடினா். அப்போது காற்றாடிகளைப் பறக்கவிட்டு இருவரும் மகிழ்ந்தனா். அதைத் தொடா்ந்து, விழா நடைபெறும் பகுதியில் இருவரும் வாகனப் பேரணியை மேற்கொண்டனா்.
ஆண்டுதோறும் மகர சங்கராந்தி விழாவையொட்டி சா்வதேச காற்றாடித் திருவிழா குஜராத்தில் நடத்தப்படுகிறது. நிகழாண்டு ஜன.14-ஆம் தேதி வரை இந்த விழா நடத்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு இந்த விழாவைக் கண்டுகளிக்க 3.83 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

