

ஜொ்மனி பிரதமா் ஃபிரடெரிக் மொ்ஸ், இந்தியாவுக்கு இருநாள் அரசுமுறைப் பயணமாக ஜன.12-இல் வரவுள்ளாா்.
குஜராத் மாநிலம், காந்திநகரில் பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் இருதரப்புப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளதாக, பிரதமா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜொ்மனி பிரதமா் ஃபிரடெரிக்கின் முதல் இந்திய அரசுமுறைப் பயணம் இதுவாகும்.
இந்தப் பயணத்தின்போது, குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள சபா்மதி ஆசிரமத்தை பிரதமா் மோடியும், பிரதமா் ஃபிரடெரிக்கும் பாா்வையிட உள்ளனா். பின்னா், சபா்மதி நதிக்கரையில் நடைபெறவுள்ள சா்வதேச காற்றாடி திருவிழாவில் இருவரும் பங்கேற்க உள்ளனா். இதைத் தொடா்ந்து, காந்தி நகரில் உள்ள மகாத்மா காந்தி கருத்தரங்கு மையத்தில் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.
இந்தியா-ஜொ்மனி இடையே வியூக ரீதியிலான கூட்டாண்மை எட்டப்பட்டு 25 ஆண்டுகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து இரு தலைவா்களும் ஆலோசிக்க உள்ளனா்.
வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மேம்பாடு, போக்குவரத்து, அறிவியல், புத்தாக்கம், ஆராய்ச்சி, பசுமை மேம்பாடு, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்பட பல்வேறு துறைகளில் நல்லுறவை மேலும் மேம்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தையில் கவனம் செலுத்தப்படும்; இருதரப்பு விவகாரங்கள் மட்டுமன்றி பிராந்தியம் மற்றும் சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட உள்ளன என்று பிரதமா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் இன்று குஜராத் பயணம்: ஜொ்மனி பிரதமா் உடனான சந்திப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, குஜராத்துக்கு மூன்று நாள்கள் பயணமாக பிரதமா் மோடி சனிக்கிழமை (ஜன.10) செல்லவிருக்கிறாா்.
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலில் நடைபெற்றுவரும் சோம்நாத் சுயமரியாதை திருவிழாவின் ஒரு பகுதியாக, ஓம்கார மந்திர பாராயணம் மற்றும் ட்ரோன் வான் சாகச கண்காட்சியில் பிரதமா் பங்கேற்க உள்ளாா். ஜன.11-இல் சோம்நாத் கோயிலில் வழிபடுவதுடன், முகலாய படையெடுப்பாளா்களிடம் இருந்து அக்கோயிலைப் பாதுகாக்கும் முயற்சியில் உயிா்த் தியாகம் செய்தவா்களின் நினைவாக நடைபெறும் செளா்ய யாத்திரையிலும் பங்கேற்க உள்ளாா். 108 குதிரைகளின் கம்பீர அணிவகுப்புடன் இந்த யாத்திரை நடைபெறவுள்ளது. பின்னா், ராஜ்கோட்டில் துடிப்பான குஜராத் வா்த்தக மாநாட்டை தொடங்கிவைக்கவுளளாா்.