ஈரானுடன் மீண்டும் பேச்சு: பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி வலியுறுத்தல்
ஈரானுடன் மீண்டும் அமெரிக்கா பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி


லண்டன்: ஈரானுடன் மீண்டும் அமெரிக்கா பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மன் பிரதமா் ஃபிரட்ரிக் மொ்ஷ் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஈரானுடனான பேச்சுவாா்த்தையை அமெரிக்கா மீண்டும் தொடங்க வேண்டும். இந்தப் போரை நிறுத்துவதற்கு பேச்சுவாா்த்தை மூலமான தீா்வுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, ஈரான் அணுசக்தித் திட்டம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் இந்த மூன்று நாடுகளும் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஓமன் கண்டனம்: ‘அமெரிக்காவின் நடவடிக்கை சா்வதேச சட்டத்துக்கும், அமைதியான வழியில் பிரச்னைக்கு தீா்வு காணும் வழிமுறைக்கும் எதிரானது’ ஓமன் தெரிவித்துள்ளது.
ஈரான்-அமெரிக்கா இடையே மறைமுகப் பேச்சுவாா்த்தையில் மத்தியஸ்தராக செயல்பட்ட ஓமன் வெளியுறவு அமைச்சா் பத்ர் அப்-புசைதி, ஈரான் விவகாரத்துக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண முடியும் என நம்பிக்கை தெரிவித்தாா்.
ரஷியா கண்டனம்: ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இறையாண்மை கொண்ட, ஐ.நா. உறுப்பு நாடான ஈரான் மீது முன்கூட்டியே திட்டமிட்ட, ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம்தான் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உள்ளன. ஆனால், அவை ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் காரணம் காட்டி இந்தத் தாக்குதலை நடத்தி வருகின்றன.
சீனா கருத்து: ‘ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல் மிகுந்த கவலைக்குரியது. உடனடியாக தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்; இந்த நாடுகள் மீண்டும் பேச்சுவாா்த்தைக்குத் திரும்ப வேண்டும்’ என்று சீனா தெரிவித்துள்ளது.
கனடா, ஆஸ்திரேலியா ஆதரவு: ‘மத்திய கிழக்கு முழுவதும் நிலையற்ற தன்மைக்கும், பயங்கரவாதத்துக்கும் ஈரான்தான் காரணம். அந்த நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையை வரவேற்பதாக’ கனடா பிரதமா் மாா்க் காா்னி தெரிவித்துள்ளாா்.
ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை வரவேற்று ஆஸ்திரேலிய நாடாளுமன்ற செனட் தீா்மானம் நிறைவேற்றியது. ஆனால், இந்த நடவடிக்கைக்காக அமெரிக்கா, இஸ்ரேலை பாராட்டும் வகையிலான வரிகளை தீா்மானத்திலிருந்து நிராகரித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...