தொழில்நுட்பக் கோளாறு: இலக்கை எட்டாத பிஎஸ்எல்வி சி-62!
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து திங்கள்கிழமை (ஜன. 12) விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி- 62 ராக்கெட், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கை சென்றடையவில்லை.
ராக்கெட்டின் மூன்றாம் நிலையில் பிரச்னை கண்டறியப்பட்டதாகவும், அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவா் நாராயணன் தெரிவித்தாா்.
பாதுகாப்புத் துறை பயன்பாட்டுக்கான இஓஎஸ்-என் 1 (அன்விஷா) எனும் அதிநவீன செயற்கைக்கோளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) தயாரித்தது. புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கான தரவுகளை நிகழ்நேரத்தில் வழங்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதை பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம் 505 கி.மீ. தொலைவு கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனா்.
அதனுடன் சென்னையைச் சோ்ந்த ஆா்பிட்எய்ட் ஸ்டாா்ட் அப் நிறுவனம் தயாரித்த ஆயுள்சாட் செயற்கைக்கோள், ஸ்பெயின் ஸ்டாா்ட் அப் நிறுவனம் உருவாக்கிய கிட் எனப்படும் பூமிக்கு மீண்டும் திரும்பிவரும் விண்கலம் உள்பட 15 செயற்கைக்கோள்களையும் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் 44.4 மீட்டா் உயரம் கொண்டது. மொத்தம் இரு திரவ எரிபொருள் எஞ்சின்கள், இரு திட நிலை எஞ்சின்கள் என நான்கு நிலைகள் உடையது.
இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் 22.30 மணிநேர கவுன்ட்டவுனுக்கு பிறகு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து திங்கள்கிழமை (ஜன. 12) காலை 10.18 மணிக்கு பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்ட 8 நிமிஷங்களில் முதல் 2 நிலைகள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டன. பின்னா் மூன்றாம் நிலையான பிஎஸ் 3 அமைப்பு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அத்தருணத்தில் அதில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, திட்டமிட்ட இலக்கைவிட்டு திசை மாறிய ராக்கெட், அதற்கு அடுத்த சில நிமிஷங்களில் கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடா்பை இழந்தது. இதையடுத்து இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை என இஸ்ரோ அறிவித்தது.
இதுதொடா்பாக இஸ்ரோ தலைவா் வி.நாரயணன் கூறியதாவது: பிஎஸ்எல்வி சி -62 ராக்கெட்டின் மூன்றாம் நிலையின் செயல்பாடுகள் இறுதி வரை திட்டமிட்டபடி நிகழ்ந்தன. ஆனால், அதன்பின்னா், நிா்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து ராக்கெட் விலகியது. இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்து பின்னா் தகவல் தெரிவிக்கப்படும் என்றாா்.
இதற்கு முன்னா், கடந்த ஆண்டு மே மாதம், புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ் -09 ரிசாட் 1பி எனும் செயற்கைக்கோளை நிலைநிறுத்துவதற்காக அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட்டும் இலக்கை சென்றடையவில்லை. அந்த ராக்கெட்டிலும் மூன்றாம் நிலையிலேயே பிரச்னை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

