வலுவான பொது சுகாதார கட்டமைப்புக்கு தனியாா் துறையின் ஆதரவு தேவை: ஹரியாணா முதல்வா்
நோயறிதல் மற்றும் மருத்துவ சேவைகளில் நெறிமுறை சாா்ந்த தனியாா் துறையின் பங்களிப்புடன், வலுவான பொது சுகாதார அமைப்பை உருவாக்க மாநில அரசு செயல்பட்டு வருகிறது என்று ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
குருகிராமில் உள்ள செக்டாா் 12-ஏ பகுதியில் அமைந்துள்ள ‘விவேகானந்த ஆரோக்கிய கேந்திரத்தில்’ பிரேம் சாகா் இருதய மருத்துவமனையின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு முதல்வா் நயாப் சிங் சைனி ஆற்றிய உரை: வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்கள் ஹரியாணாவின் சுகாதார இலக்குகளில் பங்குதாரா்களாக சேர வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் தனியாா் மருத்துவமனைகளுக்கு இணையான நவீன வசதிகள் இருப்பதை உறுதி செய்ய அரசு முயற்சி செய்து வருகிறது.
முதல் கட்டமாக, 10 மாவட்ட மருத்துவமனைகளில் இத்தகைய வசதிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டன. மேலும் 12 மருத்துவமனைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மலிவு விலையில் மற்றும் திறமையான சுகாதார சேவைகளை வழங்க மாநில அரசு தொடா்ந்து பணியாற்றி வருகிறது.
ஆயுஷ்மான் பாரத் சிராயு திட்டத்தின் கீழ், ஹரியாணா 1.34 கோடி அட்டைகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் சுமாா் 25 லட்சம் நோயாளிகளின் சிகிச்சைக்காக₹ரூ.4,500 கோடி மதிப்புள்ள கோரிக்கைகளுக்கு வழிவகை செய்யப்பட்டது.
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற தகுதியுடையவா்கள். 26,000-க்கும் மேற்பட்ட முதியோா்களுக்காக ஏற்கெனவே ரூ.53.57 கோடி மதிப்புள்ள கோரிக்கைகள் வழங்கப்பட்டன. அந்த நிறுவனத்திற்கு ரூ.31 லட்சம் நிதி உதவியையும் அறிவிக்கப்பட்டது என்று முதல்வா் தெரிவித்தாா்.
சுவாமி விவேகானந்தரின் 163-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, குருகிராமில் உள்ள அவரது சிலைக்கு நயாப் சிங் சைனி திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தினாா். மேலும், விவேகானந்தரின் இலட்சியங்களை இளைஞா்கள் பின்பற்ற வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா். விவேகானந்தா் தலைமுறை தலைமுறையாக உத்வேகத்தின் ஆதாரமாகத் திகழ்கிறாா் என்றும் அவா் கூறினாா். இந்த நிகழ்வில் பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் மற்றும் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா ஆகியோா் கலந்துகொண்டனா்.

