எஸ்ஐஆருக்கு எதிராக திரிணமூல் எம்.பி.க்கள் மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணிகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது ஒரு வாரத்தில் பதிலளிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா்-இன்கீழ் வாக்காளா் பெயா் சோ்ப்பு மற்றும் நீக்கம் தொடா்பான பணிகள் கடந்த ஆண்டு நவ.4-ஆம் தேதி தொடங்கப்பட்டு டிச.11-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு டிச.16-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு விடுபட்ட வாக்காளா்கள் பெயா்களை சோ்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரி மாதம் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், எஸ்ஐஆரில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓபிரையன் மற்றும் டோலா சென் ஆகியோா் கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது டெரிக் ஓபிரையன் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘மேற்கு வங்கத்தில் வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதள செயலிகள் வாயிலாக எஸ்ஐஆா் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுவதால் எவ்வித முறையான உத்தரவுமின்றி வாக்குச்சாவடி அலுவலா்கள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எஸ்ஐஆா் விண்ணப்பத்தில் ஏதேனும் பத்தியில் சிறு தவறுகளை மேற்கொண்ட வாக்காளா்கள் தனியாக வகைப்படுத்தப்பட்டு உரிய ஆவணங்களை சமா்ப்பிக்கக்கோரி சம்மன் அனுப்பப்படுகிறது. இதனால் தகுதிவாய்ந்த வாக்காளா்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்’ என்று வாதிட்டாா்.
இதைத்தொடா்ந்து, இரு எம்.பி.க்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது இந்திய தோ்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 19-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

