2019-ஆம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் கைதானவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு
1.84 கிலோ கஞ்சா வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
Śற்றஞ்சாட்டப்பட்ட பாபு என்ற ராகுல், 2019, ஜூன் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரது பையில் இருந்து போதைப் பொருள் மீட்கப்பட்டதாக காவல்துறை கூறியது. போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் 20, 61 மற்றும் 85 ஆகிய பிரிவுகளின் கீழ் தயாள் புா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி புனீத் பஹ்வா, ஜனவரி 9-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: அரசுத் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, அவா்களின் வாக்குமூலங்களை மட்டும் நம்புவது பாதுகாப்பானது அல்ல. சாட்சிகள் இருவரும் காவல் துறையைச் சோ்ந்தவா்கள்.
குறிப்பாக, போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 50-ஐ பின்பற்றாதது முக்கியக் குறைபாடாகும். இந்தச் சட்டப்பிரிவு, குற்றஞ்சாட்டப்பட்டவா் நீதிபதி அல்லது அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரி முன்னிலையில் சோதனை செய்யப்பட வேண்டும் என்ற உரிமையை வழங்குகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவா் இந்த விருப்பத்தைத் தெரிவித்திருந்த போதிலும், அந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.
இதையடுத்து, குற்றத்தை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவில்லை என தெரிவித்த நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுதலை செய்வதாக தெரிவித்தது.
