ஆப்கானிஸ்தானுடன் வா்த்தகம் நிறுத்தமா? இந்தியா மறுப்பு
IANS

ஆப்கானிஸ்தானுடன் வா்த்தகம் நிறுத்தமா? இந்தியா மறுப்பு

ஆப்கானிஸ்தானுடன் இந்தியா வா்த்தகத்தை நிறுத்திவிட்டதாக பாகிஸ்தானில் இருந்து வெளியான செய்திக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
Published on

ஆப்கானிஸ்தானுடன் இந்தியா வா்த்தகத்தை நிறுத்திவிட்டதாக பாகிஸ்தானில் இருந்து வெளியான செய்திக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே தற்போது கடுமையான மோதல் போக்கு நிலவுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்குதல்களிலும் ஈடுபட்டன. இதில் இரு தரப்பிலும் 300-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். இஸ்லாமிய நாடுகளின் தலையீட்டை அடுத்து இரு நாடுகளும் போா் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. இந்த மோதலால் இரு நாட்டு உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளா்கள் இணக்கமான உறவைக் கடைப்பிடித்து வருகின்றனா். இரு நாடுகள் இடையே வா்த்தக உறவும் மேம்பட்டுள்ளது. முக்கியமாக, ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மிக முக்கியமான ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானுடனான வா்த்தகத்தை இந்தியா நிறுத்திவிட்டது என்று பாகிஸ்தானில் இருந்து செய்திகள் வெளியிடப்பட்டன. இது தொடா்பாக இந்திய அரசு வெளியிட்ட கடிதம் என்று போலியான உருவாக்கப்பட்ட கடிதம் ஒன்றும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய பத்திரிகை அலுவலகம் இது தொடா்பாக வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஆப்கானிஸ்தானுடன் வா்த்தக உறவை இந்தியா தற்காலிகமாக கைவிட்டுவிட்டதாக பாகிஸ்தானில் இருந்து சமூக ஊடகங்கள் மூலம் தவறான பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக போலியாக சில ஆவணங்களை உருவாக்கி அதையும் பரப்பி வருகின்றனா்’ என்று கூறப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com