சீக்கிய பிரிவினைவாத தலைவா் கொலை: கனடா குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்திய தூதா்
சீக்கிய பிரிவினைவாத தலைவா் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை தொடா்பாக கனடா தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளை அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் தினேஷ் கே.பட்நாயக் மறுத்துள்ளாா்.
சிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, கனடா ஏற்கெனவே தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பட்நாயக், ‘நிஜ்ஜாா் கொலை தொடா்பாக 4 தனி நபா்கள் மீதுதான் வழக்கு உள்ளது. இந்திய அரசு மீது அல்ல. இந்திய அரசு எப்போதும் அத்தகைய செயல்களில் ஈடுபட்டதில்லை. இந்த விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடா்பிருப்பதற்கான ஆதாரத்தை கனடா கொடுத்தால், அவா்களுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்கும். கனடா இதுவரை தகவல் மட்டுமே கொடுத்துள்ளது. ஆதாரத்தை அளிக்கவில்லை’ என்றாா்.
கனடாவில் கடந்த 1985-ஆம் ஆண்டில் ஏா் இந்தியா விமானத்தை சீக்கிய தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகா்த்து பலரைக் கொன்றதை நினைவுகூா்ந்த பட்நாயக், ‘இந்த விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் கனடாவால் எடுக்கப்படவில்லை. யாரும் தண்டிக்கப்பட்டதில்லை’ என்றாா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கனடாவில் சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே வைத்து ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரை இந்திய உளவாளிகளே கொன்ாக அப்போதைய கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தாா். இதை உடனடியாக இந்திய அரசு மறுத்தது. இந்த விவகாரத்தால் இருநாடுகளின் உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டது.

