

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் இதனால் தலைமை தேர்தல் அதிகாரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
வாக்குப் பதிவின்போது பாரம்பரிய முறைப்படி விரல்களில் மை இடுவதை தவிர்த்துவிட்டு, மார்க்கர் மூலம் குறிப்பிடுவது முறைகேட்டிற்கு வழிவகுக்கும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது ஜனநாயகத்தை கொலை செய்வதற்கான முயற்சி எனவும் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நேற்று (ஜன. 15) நடைபெற்றது. மொத்தம் 2,869 இடங்களுக்கு 15,931 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மும்பையின் 227 வார்டுகளில் 1,700 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு மட்டும் 1.03 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், 46 - 50% வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையர் தினேஷ் வாக்மார் தெரிவித்தார்.
வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பல்வேறு உள்ளாட்சித் தொகுதிகளில் இருந்து மும்பையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மும்பையில் 23 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 2,299 அதிகாரிகள் வாக்குகளை எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
வாக்குப் பதிவு முடிவுகளின் அடிப்படையில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளும் பாஜக - சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே) இணைந்த மகாயுதி கூட்டணியே பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் அழியாத மை பயன்படுத்துவதற்கு பதிலாக மார்க்கர் பேனாக்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.
தவறான நிர்வாகத்தின் காரணமாக இந்த முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், தேர்தல் அதிகாரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் இது ஜனநாயகத்தை கொலை செய்வதற்கான முயற்சி எனவும் விமர்சித்துள்ளார்.
முறைகேடுகள் செய்து குறுக்கு வழியில் வெற்றி பெற்று விடலாம்' என ஆளுங்கட்சி கூட்டணி முயற்சிப்பதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.