

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜன. 16) நடைபெறவுள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மகாராஷ்டிரத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு நேற்று (ஜன. 15) வாக்குப் பதிவு நடைபெற்றது. நாட்டிகே வணிகத் தலைநகராக கருதப்படும் மும்பை மாநகராட்சியில் மட்டும் 227 வார்டுகளில் 1,700 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்தத் தேர்தலில் பாஜக, சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே அணி) மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கொண்ட ஆளுங்கட்சியின் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் தாக்கரே அணி) மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கொண்ட எதிர்க்கட்சியின் மகா விகாஸ் அகாடி கூட்டணியும் போட்டியிடுகின்றன.
நேற்று காலை வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒருசில இடங்ககளில் நேரம் நீட்டிக்கப்பட்டது. எனினும் மந்தமாகவே வாக்குப் பதிவு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பேசிய மாநில தேர்தல் ஆணையர் தினேஷ் வாக்மார், உள்ளாட்சித் தேர்தலில் 46 - 50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். மும்பையில் 41.08% வாக்குகள் பதிவாகியிருந்தன. புணே வில் 36.95%, நாக்பூரில் 41.23%, சத்ரபதி சாம்பாஜிநகரில் 43.67%, நாசிக்கில் 39.63% வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக கொலாபா தொகுதியில் 15.73% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப் பதிவுக்கு பிறகான கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக - சிவசேனை கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
பல்வேறு நகராட்சிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டி இயந்திரங்கள் மும்பைக்கு இரவோடு இரவாக கொண்டுவரப்பட்டன. மும்பையில் 23 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 2,299 அதிகாரிகள் வாக்குகளை எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ளனர். காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.