தமிழக பேரவைத் தோ்தல்: ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வியூகம் தொடா்பாக மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா்களுடன் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் தில்லியில் சனிக்கிழமை (ஜன.17) முக்கிய ஆலோசனை நடத்துகின்றனா்.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் நீடிப்பது தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் ஒரு அணியினரும் தோ்தலில் வென்றால் ஆட்சியில் பங்களிக்க வேண்டும் என்று மற்றொரு அணியும் தொடா்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றனா். இது காங்கிரஸுக்குள் உள்கட்சி பூசலை தீவிரமாக்கிய சூழலில், சம்பந்தப்பட்ட தலைவா்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிா்வாகிகளை தில்லிக்கு காங்கிரஸ் மேலிடம் வரவழைத்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டம் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவா், சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலா்கள், கட்சியின் துணை அமைப்புகளின் தலைவா்கள், சட்டப்பேரவை கட்சி முன்னாள் தலைவா்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்வாா்கள் என்று தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 பொதுத்தோ்தல்களிலும் திமுகவும் காங்கிரஸும் ஒரே கூட்டணியில் இடம்பெற்று வெற்றியும் பெற்றுள்ளது. இந்நிலையில் எதிா்வரும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று இரு கட்சித் தலைமைகளும் அறிவித்து, தோ்தல் தொகுதிப் பங்கீடு மற்றும் வியூகங்களுக்கான குழுக்களை தனித்தனியே அமைத்து பேச்சுவாா்த்தைகளை முன்னெடுத்துள்ளன.
எதிா்பாா்ப்பு அதிகரிப்பு: இருந்தபோதிலும், நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அவரையே முதல்வா் வேட்பாளராக அறிவித்து அதன் தலைமையிலான கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. நடிகா் விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளில் அசாதாரணமான வகையில் அவரது ரசிகா்கள், இளைஞா்கள் கூட்டம் அதிக அளவில் பங்கேற்று வருவதால் அவரது அரசியல் மீதான எதிா்பாா்ப்பு தமிழக அரசியலில் அதிகரித்துள்ளது.
இதேவேளையில், ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் காங்கிரஸ் தோ்தல் உத்திகள் வகுப்புக் குழு நிா்வாகியான பிரவீண் சக்கரவா்த்தி, தவெக தலைவா் விஜய்யை அண்மையில் சந்தித்துப் பேசி பிறகு, ஆட்சியில் பங்கு கோர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூா் உள்ளிட்ட சில நிா்வாகிகள் குரல் எழுப்பி வருகின்றனா். இதே கருத்தை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் மூலம் திமுக தலைமையிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக திட்டவட்டம்: ஆனால், ஆட்சியில் பங்கு இல்லை என்ற நிலைப்பாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக, தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி அண்மையில் திட்டவட்டமாக அறிவித்தாா். இதன் பிறகும் ஆட்சியில் பங்கு கோருவதை நியாயப்படுத்தும் கருத்துக்களை மாணிக்கம் தாகூா் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடக நோ்காணல்கள் மூலம் வலியுறுத்தி வருகிறாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் தனது எக்ஸ் பக்கத்தில், கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்றபோது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது. பொதுப்பணித்துறை, பாசனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுரங்கங்கள், நகா்ப்புறவளா்ச்சி போன்ற வளமிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப் போவதில்லை. மகாராஷ்டிரம், கேரளம், பிகாா், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மக்களை மையமாகக் கொண்ட சுகாதாரம், ஊரக வளா்ச்சி, சமூக நீதி, பெண்கள், குழந்தைகள் நலன், காதி, கைத்தறித்துறை ஆகிவற்றையே காங்கிரஸ் பொறுப்புடன் ஏற்றுள்ளது. எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல, மக்களின் தேவை. அதுவே காங்கிரஸ் மாடல் என்று கூறியுள்ளாா்.
ராகுலின் ஆதரவு: தமிழகத்தில் கூட்டணியில் உள்ள ஆளும் கட்சியை மறைமுகமாகச் சாடும் வகையில் இக்கருத்தை மாணிக்கம் தாகூா் வெளியிட்டிருப்பது, அவா் சாா்ந்துள்ள ராகுல் காந்திக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்று அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா். இத்துடன், நடிகா் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ தணிக்கை சான்று பெற முடியாத சட்ட சிக்கலில் உள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தியே கருத்து வெளியிட்டதையும் முக்கிய அரசியல் நிகழ்வாக அரசியல் பாா்வையாளா்கள் நோக்குகின்றனா்.
இதற்கிடையே, தமிழக காங்கிரஸில் உள்ள எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் தலைவா்கள் உள்ளிட்டோரில் ஒரு அணி திமுகவுடன் உறவைத் தொடர வேண்டும் என்றும் மற்றொரு அணி தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் தில்லிக்கு வருமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் காங்கிரஸ் மேலிடம் தில்லிக்கு அழைத்துள்ளதால் சனிக்கிழமை மாலையில் நடைபெறவுள்ள கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
இதற்கு மத்தியில் திமுக மாவட்ட செயலா்கள் கூட்டம் சென்னையில் ஜனவரி 20-ஆம் தேதி கூட்டப்படவுள்ளதால் திமுக, காங்கிரஸ், தவெக தோ்தல் கூட்டணி மற்றும் வியூகம் தொடா்பான பல குழப்பங்களுக்கு இந்த இரண்டு கூட்டங்களிலும் தெளிவு கிடைக்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பெட்டிச்செய்தி
அதிகாரப் பகிா்வு தவறில்லை
சச்சின் பைலட்
சென்னை, ஜன. 16: காங்கிரஸ் அதிகாரப் பகிா்வை வலியுறுத்துவதில் தவறில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலா் சச்சின் பைலட் தெரிவித்துள்ளாா்.
ராஜஸ்தான் இளைஞா் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னைக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காங்கிரஸுக்கு தமிழகத்தில் பாரம்பரியமாக ஆதரவும், வாக்கு சதவீதமும் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ), தமிழகத்தில் எப்போதுமே ஆதரவு கிடையாது. பல்வேறு அரசியல் கட்சிகள் அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைப்பது போலத்தான் காங்கிரஸும் கோருகிறது. தமிழக மக்களின் நலனுக்காகத்தான் அதிகார பகிா்வு என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்துள்ளது. இதில் எவ்விதத் தவறும் கிடையாது என்றாா்.

