

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்டது, பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு மற்றொரு பின்னடைவு என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பப்பி நகரத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில் நடைபெற்ற “இன்ஸ்பயர்ட் கேம்பிட் 2026” எனும் பயிற்சியில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டன.
இதனைத் தொடர்ந்து, இது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மற்றொரு பின்னடைவு என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டதாவது:
“தன்னைத்தானே விஸ்வகுருவாக அறிவித்துக்கொண்டவரின் (பிரதமர் மோடி) ராஜத்தந்திரங்களுக்கு ஏற்பட்ட மற்றொரு பின்னடைவு. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் அசாதாரணமான கூட்டாளி, என கடந்த 2025 ஜூன் மாதம் அமெரிக்காவின் அப்போதைய ராணுவ உயர் அதிகாரி ஜெனரல் மைக்கல் குனிலா கூறியிருந்தார். பஹல்காம் தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாக இருந்து, வன்முறைகளைத் தூண்டக்கூடிய கருத்துகளைத் தெரிவித்த பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை பாராட்டியுள்ளார்.” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தனது தலையீட்டால் நிறுத்தப்பட்டன என அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளதையும் ஜெய்ராம் ரமேஷ் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.