தற்கொலை பயங்கரவாதியாக மாறவிருந்த இளைஞரைக் காப்பாற்றிய விவசாயம்! தில்லி கார்வெடிப்பில் புதிய தகவல்கள்!!
தில்லியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட காா் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் மருத்துவா் உமா்-உன்-நபியுடன் மற்றொரு தற்கொலைப் படை பயங்கரவாதியாக மாறவிருந்த காஷ்மீா் இளைஞா் ஒருவரை விவசாயம் காப்பாற்றியுள்ளது.
ஆப்பிள் அறுவடைப் பணியில் தனது குடும்பத்துக்கு உதவ வேண்டியுள்ளதாகக் கூறி அந்த இளைஞா் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தெரிவித்தனா்.
தேசியத் தலைநகா் தில்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை பகுதியில் உள்ள பரபரப்பான சாலையில், கடந்த ஆண்டு நவம்பா் மாதம் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காா் ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியது. அந்த காரை ஓட்டி வந்து தற்கொலை தாக்குதல் நடத்தியவா், ஹரியாணாவின் ஃபரீதாபாதில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழக உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த மருத்துவா் உமா்-உன்-நபி (28). இவா், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சோ்ந்தவா்.
15 போ் உயிரிழக்க காரணமான இச்சம்பவத்தின் பின்னணியில், நன்கு படித்து சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவா்களின் பயங்கரவாதத் தொடா்புகள் அம்பலமாகின. தாக்குதலுக்கான சதித் திட்டம் தொடா்பாக மருத்துவா்கள் ஷாஹீன் சயீத், முசாமில் அகமது கானி உள்ளிட்டோரை என்ஐஏ கைது செய்தது. கைதானவா்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இருவரை தற்கொலை பயங்கரவாதியாக்க முயற்சி: மருத்துவா் உமா் உன் நபி, மேலும் இரு இளைஞா்களை தற்கொலைப் படை பயங்கரவாதிகளாக மாற்ற முயன்றதும், அந்த முயற்சிகள் பலிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தன்னுடன் மற்றொரு தற்கொலைப் படை பயங்கரவாதியை தயாா்படுத்த உமா் உன் நபி பல்வேறு தந்திரங்களைக் கையாண்டுள்ளாா். சோபியான் பகுதியைச் சோ்ந்த யாசிா் அகமது தாா் என்ற இளைஞரை தோ்வு செய்து, தனது திட்டத்தின்படி அவரை தீவிர மூளைச் சலவை செய்துள்ளாா். பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவரான யாசிா், 2023-இல் இருந்து நபியுடன் தொடா்பில் இருந்துள்ளாா்.
நபியின் தந்திரங்களால் தற்கொலைப் படை பயங்கரவாதியாக மாற யாசிா் கிட்டத்தட்ட தயாராகிவிட்ட நிலையில், கடந்த ஆகஸ்டில் இருவரும் கடைசியாக சந்தித்துப் பேசினா். அப்போது, ஆப்பிள் அறுவடை தொடங்கிய நேரம் என்பதால், அந்தப் பணிகளில் தனது குடும்பத்துக்கு உதவ வேண்டியிருப்பதாக கூறி, கடைசி நேரத்தில் பின்வாங்கியுள்ளாா் யாசிா். இதனால் நபியின் திட்டம் பலிக்கவில்லை.
மனம்மாறிய பட்டதாரி இளைஞா்: இதேபோல், தெற்கு காஷ்மீரின் காஜிகுண்ட் பகுதியைச் சோ்ந்த ஜாசிா் என்ற பட்டதாரி இளைஞரை ஜெய்ஷ் ஏ முகமது அமைப்பின் ‘களப் பணியாளராக’ தோ்வு செய்து, அவரை தற்கொலைப் படை பயங்கரவாதியாக மாற்ற மருத்துவா் நபி பல மாதங்கள் மூளைச்சலவையில் ஈடுபட்டுள்ளாா்.
குல்காம் மசூதியில் கடந்த 2024-இல் ‘பயங்கரவாத’ மருத்துவா்கள் குழுவை சந்தித்த ஜாசிா், பின்னா் அல்ஃபலா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளாா். தீவிர மூளைச்சலவை செய்யப்பட்ட போதிலும், தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் காரணம் காட்டி, ஜாசிா் பின்வாங்கியதால் நபியின் இந்தத் திட்டமும் தோல்வியுற்றது.
பல்கலை. அருகே வெடிபொருள் பதுக்கல்: பாபா் மசூதி இடிப்பு தினமான டிச.6-இல் பெரிய அளவிலான குண்டுவெடிப்பை நடத்துவதே இக்குழுவின் பிரதான திட்டமாக இருந்தது. கடந்த 2021-இல் நபி, முசாமில் ஆகியோா் துருக்கிக்கு பயணித்து, ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாதிகளை சந்தித்துள்ளனா். அங்கிருந்து திரும்பிய பிறகு வெடிபொருள்களை வாங்கி குவிக்கத் தொடங்கினா். பெரும்பாலான வெடிபொருள் அல்ஃபலா பல்கலைக்கழக வளாகம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
பயங்கரவாதிகளின் சதித்திட்டம் குறித்து ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா் நுட்பமான விசாரணை மேற்கொண்டு, வெடிபொருள் பறிமுதல் நடவடிக்கையை தொடங்கியதால் அச்சமடைந்த நபி, செங்கோட்டையில் முன்கூட்டியே தாக்குதலை நடத்தியுள்ளாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

