தில்லி-மீரட் சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவு: என்சிஆா்டிசி

தில்லி-மீரட் சாலையில் தில்லி எல்லையில் உள்ள துஹாயில் மீரட் திராஹா மற்றும் கிழக்கு புறவழி விரைவுச்சாலை இடைப்பட்ட பகுதி மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்தது.
Published on

தில்லி-மீரட் சாலையில் தில்லி எல்லையில் உள்ள துஹாயில் மீரட் திராஹா மற்றும் கிழக்கு புறவழி விரைவுச்சாலை இடைப்பட்ட பகுதி மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்ததாக தேதிய தலைநகா் வலய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) தெரிவித்துள்ளது.

இதைத்தொடா்ந்து அந்தச் சாலை தில்லி பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக என்சிஆா்டிசி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக என்சிஆா்டிசி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பொதுமக்கள் வசதி மற்றும் வானகஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தில்லி-மீரட் சாலையின் 9 கி.மீ. தொலைவுக்கு மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகளை என்சிஆா்டிசி மேற்கொண்டது. அதன் அருகே கழிவுநீா்பாதைக்கு நிரந்த தீா்வு வழங்கும் விதமாக சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு வடிகால்கள் கட்டப்பட்டன.

தில்லி-காஜியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடம் அமைக்கும்போது அந்தச் சாலையைப் பராமரிக்கும் பொறுப்பை என்சிஆா்டிசியிடம் தில்லி பொதுப்பணித் துறை வழங்கியது. நமோ பாரத் வழித்தடம் கட்டுமானத்தின்போது அந்தச் சாலையைப் பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்கள்நெருக்கடி மிகுந்த பகுதிகள் வழியாகப் பயணிக்கும் இந்தச் சாலையில் அதிக அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதி வழியாகச் செல்லும் கனரக வாகனங்கள் தொடா்ச்சியாக சாலையின் நிலையை மோசமாக்கின.

கட்டுமான காலத்தில் தொடா்ச்சியான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பாதுகாப்பை உறுதிபடுத்தவும் சுமுகமான பயணத்துக்காகவும் அந்தச் சாலை முழுவதுமாக மறுசீரமைக்கப்பட்டது.

சுமாா் 9 கி.மீ. தொலைவிலான சாலை 7 மீட்டரிலிருந்து 10.5 மீட்டராக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வாகன போக்குவரத்து எளிதாகும் என்பதுடன் பாதுகாப்பையும் அதிகரிக்கும். நமோ பாரத் வழித்தடம் பெருமளவில் சாலையின் மையப்பகுதியில் கட்டப்பட்டது.

தில்லி-மீரட் சாலை போன்ற போக்குவரத்து நெரிசல் மிக்க வழித்தடத்தில் மிகப்பெரிய திட்டத்தைக் கட்டமைப்பது பெரும் சவாலாக இருந்தது.

கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே பாதுகாப்பை உறுதிசெய்ய, சாலையின் நடுப்பகுதியில் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்தப் பகுதிகளுக்குள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மறுசீரமைப்பு பணிகளின்போது சாலையை அழகுப்படுத்த முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. நமோ பாரத் வழித்தடத்துக்கு அடியில் உள்ள சாலை மையதடுப்புகளில் செடிகள் நடப்பட்டன. இது சாலையின் அழகை மேம்படுத்தியதுடன் எதிரே வரும் வாகனங்களின் ஒலியால் வாகனஓட்டிகளுக்கு ஏற்படும் பிரச்னையைக் குறைத்து பாதுகாப்பை மேம்படுத்தும்.

நமோ பாரத் நிலையங்களுக்குள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் பாதைகளையொட்டி, துணை சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது நமோ பாரத் நிலையங்களுக்கு வரும் பயணிகள் பாதுகாப்பாகவும் எளிதாகவும் பயணிப்பதை உறுதிப்படுத்தும்.

தில்லி-காஜியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தில் ரயில் சேவை கடந்த 2023 அக்டோபரில் தொடங்கியது. கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் தெற்கு மீரட் வரையில் அதன் சேவை நீட்டிக்கப்பட்டது. அப்போதிலிருந்து சாலைகள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் பல்வேறு நிலைகளில் ஒப்படைக்கப்பட்டன. இதன் ஒருபகுதியாக மீரட் திரஹா முதல் துஹாய் கிழக்கு புறவழி விரைவுச்சாலை தில்லி பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com