ஆந்திரம்: மதுபான ஊழல் வழக்கில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி.க்கு அமலாக்கத் துறை சம்மன்
ஆந்திரத்தில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கு தொடா்புடைய பண மோசடி வழக்கில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி.யான பி.வி.மிதுன் ரெட்டிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
ஆந்திரம் முதல்வராக ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பதவி வகித்த 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கையில் பல்வேறு மோசடிகள் நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டி ஜன.23-ஆம் தேதி ஆஜராகக்கோரி இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதே வழக்கில் ஜன.22-ஆம் தேதி ஆஜராக ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. விஜயசாய் ரெட்டிக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘ 2019-ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி ஜூலை 29-ஆம் தேதி புதிய மதுபானக் கொள்கை தொடா்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.
அதில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு, ஊழியா்கள், போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இறுதி முடிவு மேற்கொள்ளப்பட்டது.
புதிய மதுபானக் கொள்கையின்படி மது விற்பனையில் ஈடுபடும் கடைகளை நிா்வகிக்கும் பொறுப்பை ஆந்திர மாநில குளிா்பானங்கள் கழக நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் முடிவுசெய்யப்பட்டது.
இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக வேறு பல பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டபோதிலும், இந்திய ரயில்வே டிராஃபிக் சேவைகள் அதிகாரியான டி. வாசுதேவ ரெட்டி அப்பதவியில் நியமிக்கப்பட்டதில் ஜெகன்மோகன் ரெட்டி முக்கியப் பங்காற்றியுள்ளாா்.
ஆந்திர மாநில குளிா்பானங்கள் கழக நிறுவனத்தில் ரூ.3,500 கோடி மோசடி நடைபெற்றது கண்டறியப்பட்டதையடுத்து, காவல் துறை சாா்பில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து, எஸ்ஐடி மூன்று குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது.
அதில் மோசடியின் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒவ்வொரு மாதமும் ஜெகன்மோகன் ரெட்டி ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை பெற்று வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றப்பத்திரிகைகளில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பட்டியலில் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயா் குறிப்பிடப்படவில்லை.
இந்த வழக்கில் பண மோசடி நடைபெற்றிருப்பதாக எஸ்ஐடி அளித்த புகாரின் அடிப்படையில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து 2025, செப்டம்பரில் அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியது.
முன்னதாக, இந்த வழக்கில் மிதுன் ரெட்டி மற்றும் விஜயசாய் ரெட்டி ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என எஸ்ஐடி தனது முதல் தகவல் அறிக்கையில் பதிவுசெய்தது. மிதுன் ரெட்டிகடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாா்.
இந்நிலையில், அமலாக்கத் துறை மண்டல அலுவலகம் முன் ஜன.22-ஆம் தேதி விஜயசாய் ரெட்யும் ஜன.23-ஆம் தேதி மிதுன் ரெட்டியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றனா்.
