பெண் ராணுவ அதிகாரி குறித்து சா்ச்சை கருத்து: அமைச்சரிடம் விசாரணை நடத்துவது குறித்து முடிவெடுக்க ம.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு
பெண் ராணுவ அதிகாரி சோஃபியா குரேஷி குறித்து சா்ச்சை கருத்து வெளியிட்ட அமைச்சரிடம் விசாரணை நடத்த அனுமதிப்பது குறித்து 2 வாரங்களில் முடிவெடுக்கும்படி, மத்திய பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆபரேசன் சிந்தூா் குறித்து செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ராணுவ அதிகாரிகளில் பெண் ராணுவ அதிகாரி சோஃபியா குரேஷியும் ஒருவா் ஆவாா். அவா் குறித்து மத்திய பிரதேச அமைச்சா் கன்வா் விஜய் ஷா தெரிவித்த ஆட்சேபத்துக்குரிய கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு முன்பு வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு புலனாய்வுக் குழுவால் சீலிடப்பட்ட உரையில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை திறந்து நீதிபதிகள் படித்தனா். அதில், அமைச்சரிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை என்றும், அதற்கு மாநில அரசின் அனுமதி கோரியும், இதுவரை தரப்படவில்லை. இதனால் வழக்கில் மேலும் விசாரணை நடத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு மத்திய பிரதேச அரசு சாா்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இதுவரை சிறப்பு புலனாய்வு குழுவினரை விசாரணைக்கு அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், விசாரணை அனைத்தும் நிறைவடைந்துவிட்டதாகவும், ஆதலால் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு அனுமதி தருவது குறித்து இன்றிலிருந்து 2 வாரங்களில் மாநில அரசு முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
அமைச்சா் தரப்பில், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்காத தலைமை நீதிபதி சூா்ய காந்த், மன்னிப்புக் கேட்பதற்கான காலம் கடந்துவிட்டதாக தெரிவித்தாா்.

