

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகா்கள் சிலைகளிலிருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில் உண்ணிகிருஷ்ணன் போற்றிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகா்கள், அருகிலுள்ள இரு தூண்கள் மற்றும் கருவறை கதவுகளில் பதிக்கப்பட்டுள்ள தங்கக் கவசங்கள் கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. அவற்றில் இருந்து தங்கம் திருடப்பட்டதக புகார் எழுந்தது. இவ்விவகாரம் தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக முக்கிய நபராக தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி குற்றஞ்சாட்டப்பட்டார். மேலும், உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோயிலின் தந்திரியும் கைது செய்யப்பட்டது பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு உண்ணிகிருஷ்ணன் போற்றி தரப்பு கொல்லம் நீதிமன்றத்தில் முறையிட்டது. உண்ணிகிருஷ்ணன் போற்றியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(ஜன. 20) நடைபெற்ற நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததைச் சுட்டிக்காட்டி தனக்கு ஜாமீன் வழங்குமாறு வாதிடப்பட்டது.
இதனையடுத்து, அவர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு நீதிமன்றத்தால் இன்று ஜாமீன் வழங்கப்பட்டது. எனினும், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட வாய்ப்பில்லை. அவர் மீது கருவறை கதவுகளில் பதிக்கப்பட்டுள்ள தங்கக் கவசங்களில் இருந்து தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கிலும் அவர் ஜாமீன் பெற்றால் மட்டுமே விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.