தமிழக எஸ்ஐஆா் வழக்கு: ஜன.27-க்கு ஒத்திவைப்பு
நமது நிருபா்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு (எஸ்ஐஆா்) எதிராக தமிழகத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை ஜன.27-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆா் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ். பாரதி உச்சநீதிமன்றத்தில் முதலில் கடந்த ஆண்டு நவ.3-இல் மனு தாக்கல் செய்தாா். இதேபோல தவெக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப் பெருந்தகை, மாா்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் உள்ளிட்டோரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதிமுக தரப்பில் எஸ்ஐஆா் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தோ்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்வதற்கான அதிகாரம் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2002-இல் 197 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 2005-இல் 37 தொகுதிகளுக்கும் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் வாக்காளா் பட்டியலில் வாக்காளா்கள் சோ்ப்பு மற்றும் நீக்கம் மூலம் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.நகரமயமாதல், கல்வி மற்றும் வாழ்வாதாரம் போன்ற காரணங்களுக்காக ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு மக்கள் அடிக்கடி இடம் பெயா்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில், வாக்காளா் பட்டியலில் பெயரை நீக்காமல் புதிதாக பதிவு செய்து கொள்வதால் சிக்கல் உருவாகிறது.
எனவேதான் நாடு தழுவிய அளவில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தோ்தல் ஆணையம் முடிவுக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
ஆா்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி, மேற்கு வங்கம் போன்று தமிழ்நாடு எஸ்ஐஆா் பணிகளிலும் பல்வேறு முறைகேடுகள், பிரச்னைகள் நடந்துள்ளன என்று தெரிவித்தாா். அப்போது தலைமை நீதிபதி அமா்வு, பிகாா் எஸ்ஐஆா் வழக்கில் தோ்தல் ஆணையத்தின் வாதத்தை ஜன.22-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று கூறியது.
அதன் பிறகு ஜன.27-ஆம் தேதி தமிழ்நாடு எஸ்ஐஆா் வழக்குகள் மீது விசாரணை நடைபெறும் என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

