

பாட்னா உயர்நீதிமன்றம் ஒரேநாளில் 463 பேருக்கு பிணை வழங்கி அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
மதுபானம் இல்லாத பிகாரை உருவாக்குவதாக முதல்வர் நிதிஷ் குமார் பெண் வாக்காளர்களுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், கடந்த 2016 ஏப்ரல் 1ல் மதுபான தடை சட்டம் அமலானது. இதன்படி பிகாரில் மதுபானம் உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது.
அதன்படி, விரைவான நீதி வழங்குவதில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படும் வகையில், பாட்னா உயர் நீதிமன்றம் மதுவிலக்கு மீறல் தொடர்பான 508 வழக்குகளை விசாரித்து 463 பேருக்குப் பிணை வழங்கி சாதனையைப் படைத்துள்ளது.
ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டதும், மதுவிலக்குச் சட்டத்தை மீறியதற்காக நீண்ட காலமாகச் சிறையில் உள்ள 90 சதவீதம் பேருக்குப் பிணை அல்லது முன் ஜாமீன் வழங்கப்பட்டதும் இதுவே முதல்முறையாகும்.
நீதிபதி ருத்ர பிரகாஷ் மிஸ்ரா தலைமையிலான ஒற்றை அமர்வு மதுவிலக்குச் சட்டங்களை மீறியதால் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் 508 மனுக்களை விசாரித்து, 463 பேருக்குப் பிணை வழங்கியது. இதற்கு முன்னதாக ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்டோருக்குப் பிணை வழங்கப்பட்ட முந்தைய சாதனையை இது முறியடித்தது.
மதுபான தடைச் சட்டத்தைத் தவறாகச் செயல்படுத்தியதாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. வழக்குகள் குவிந்துவரும் நிலையில் விரைவாக முடித்துவைத்தற்கு உதவிய அரசு வழக்குரைஞர்களின் முயற்சிகளை நீதிபதி பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.