காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து 10 ராணுவ வீரா்கள் உயிரிழப்பு
PTI

காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து 10 ராணுவ வீரா்கள் உயிரிழப்பு

Published on

ஜம்மு-காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வீரா்கள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: தோடா மாவட்டத்தில் பதோ்வா-சம்பா சாலையில் 9,000 அடி உயரமுள்ள கான்னி எனுமிடத்தில், பயங்கரவாத தடுப்புப் பணிக்காக ராணுவ வீரா்கள் 20-க்கும் மேற்பட்டோருடன் குண்டு துளைக்காத வசதி கொண்ட ‘காஸ்பா்’ ராணுவ வாகனம் வியாழக்கிழமை சென்றது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அருகிலுள்ள 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்த தகவலின்பேரில் ராணுவத்தினரும், காவல் துறையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் 4 ராணுவ வீரா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 17 வீரா்கள் மீட்கப்பட்ட நிலையில் அவா்களில் பலத்த காயமடைந்த 6 போ் உயிரிழந்தனா். மற்ற 11 வீரா்கள் உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டனா் என்றனா்.

துணைநிலை ஆளுநா் இரங்கல்: விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் சின்ஹா வெளியிட்ட பதிவில், ‘தீரமிக்க ராணுவ வீரா்கள் 10 போ் சாலை விபத்தில் மரணமடைந்தது மிகுந்த கவலையைத் தருகிறது; அவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

முதல்வா் ஒமா் அப்துல்லா வெளியிட்ட பதிவில், ‘உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தோா் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன்’ எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com