மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) அடிப்படைக் கருத்தையே முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தார்.
எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டத்தின் பெயரை வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்டம் (விபி ஜி ராம் ஜி) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை இத்திட்டத்துக்கான முழு நிதியும் மத்திய அரசு ஏற்றுவந்த நிலையில், தற்போது மாநில அரசுகள் 40 சதவீத பங்களிக்க வேண்டும் என்று மாற்றம் செய்துள்ளது.
மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்கும், மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்ற திருத்தத்துக்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், தில்லியில் எம்ஜிஎன்ஆர்இஜிஏ பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பங்கேற்கும் மாநாடு இன்று நடைபெற்று வருகின்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
ராகுல் காந்தி பேசியதாவது:
”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) நோக்கம் ஏழைகளுக்கு உரிமைகளை வழங்குவதாக இருந்தது. நாட்டில் வேலைத் தேவைப்படும் எவரும் கண்ணியத்துடன் இத்திட்டத்தின் மூலம் வேலையைப் பெறலாம் என்பதே அடிப்படை நோக்கம்.
மேலும், நாட்டின் மூன்றாவது அரசு அமைப்பான பஞ்சாயத்துகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அது மக்கள் மற்றும் தொழிலாளர்களின் குரலையும், கண்ணியத்தையும் உள்ளடக்கியிருந்தது. இத்திட்டத்தின் அடிப்படையே ’உரிமை’ என்ற வார்த்தைதான். தற்போது உரிமை என்ற அடிப்படை கருத்தையே முடிவுக்கு கொண்டுவர மோடி மற்றும் பாஜக விரும்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.