

குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் கூறியும் அஸ்ஸாம் பாரம்பரியத் துண்டை அணியவில்லை என்று பாஜக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
குடியரசு நாளையொட்டி, தில்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அளித்த விருந்தில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விருந்தில், வடகிழக்கின் 8 மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அம்மாநிலங்களின் பாரம்பரியப் பொருள்கள் இடம்பெற்றிருந்தன.
அந்த வகையில் விருந்துக்கு வருகைதந்த அனைவருக்கும் அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய ’கமோசா’ (துண்டு) வழங்கப்பட்டது. அனைவரும் அந்த துண்டை கழுத்தில் அணிந்திருந்தனர்.
இந்த நிலையில், விருந்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி அஸ்ஸாம் துண்டை கழுத்தில் அணிய மறுத்ததாகவும், குடியரசுத் தலைவர் இருமுறை அறிவுறுத்தியும் ராகுல் அணியவில்லை என்றும் பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வடகிழக்கு மாநிலங்களையும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,
“ராகுல் காந்தி கமோசா அணிந்திருந்தார். அவர் சாப்பிடும்போது அதை மடித்து வைத்தார். இதனை ஒரு பிரச்னையாக பாஜகவினர் மாற்றியுள்ளனர்.
குடியரசு நாள் அணிவகுப்பின்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை மூன்றாவது வரிசையில் அமர வைத்து அவர்கள் அரசியலமைப்பையே அவமதித்திருக்கிறார்கள். மாநில அமைச்சர்களுடன் வரிசையில் எங்களை காக்க வைத்தனர். வேண்டுமென்றே எதிர்க்கட்சியை இவ்வளவு அவமதிக்கிறார்கள்.
வடகிழக்கு மாநிலங்களை அவமதிப்பதற்காகவே காங்கிரஸ் இப்படிச் செய்கிறது என்று பாஜக கூறுவதை நான் கண்டிக்கிறேன். அவர்கள் காங்கிரஸை அவமதிப்பதற்காகவும், வரவிருக்கும் தேர்தல்களுக்காகவும் மட்டுமே இதைச் செய்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தில்லி கடமைப் பாதையில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் கார்கேவுக்கும், ராகுலுக்கும் மூன்றாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.