ஆளுநர் வெளிநடப்பு: கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஆளுநரை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முற்றுகையிட்டு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவையில் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. மரபுப்படி மாநில ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்காமல், அவர் சொந்தமாக தயாரித்த உரையை வாசிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், உரையை வாசிக்காமல் பேரவையைவிட்டு வெளிநடப்பு செய்தார். இதனிடையே அவரை வெளியேறவிடாமல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாதையை வழிமறித்து முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும், ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் சித்தராமையா,
“ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்ற வேண்டும், அது அமைச்சரவையால் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டம். இன்று, அமைச்சரவை தயாரித்த உரைக்கு பதிலாக, ஆளுநர் தானே தயாரித்த உரையைப் படித்தார்.
இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 176 மற்றும் 163 ஆகிய பிரிவுகளை மீறுவதாகும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் தனது கடமையை நிறைவேற்றவில்லை. அவரின் செயலுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தப் போகிறோம். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக சட்டப்பேரவையில் அரசு தயாரித்த உரையைப் படிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.