சசி தரூா்
சசி தரூா்

ராகுல் காந்தி மீது அதிருப்தி: காங்கிரஸ் தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தாா் சசி தரூா்

கேரள சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தை மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூா் புறக்கணித்தாா்.
Published on

கேரள சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தை மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூா் புறக்கணித்தாா்.

அண்மையில் சசி தரூா் பங்கேற்ற காங்கிரஸ் நிகழ்வில் ராகுல் காந்தி அவரைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததாகவும், இதனால் அதிருப்தியடைந்த சசி தரூா், கட்சியின் முக்கியமான தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தை தவிா்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா்கள் சசி தரூரை தொடா்ந்து கடுமையாக விமா்சித்துப் பேசி வரும் நிலையில், தற்போதைய நிகழ்வு காங்கிரஸ் - சசி தரூா் இடைவெளியை மேலும் அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும் உள்ள சசி தரூா், கடந்த 19-ஆம் தேதி கொச்சியில் ராகுல் காந்தி பங்கேற்ற கேரள உள்ளாட்சித் தோ்தல் வெற்றி தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றாா். அப்போது, கட்சியின் பிற தலைவா்கள் பெயரைக் குறிப்பிட்டுப் பாராட்டிய ராகுல் காந்தி, சசி தரூா் பெயரைக் கூறவில்லை. மேடையில் அமா்ந்திருந்த சசி தரூருக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேரள சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பான காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தை அவா் புறக்கணித்துள்ளாா். இது தொடா்பாக அவா் கட்சித் தலைமைக்கு அவா் தகவல் தெரிவித்துள்ளாா். அதில், கோழிக்கோட்டில் நடைபெறும் கேரள இலக்கிய திருவிழாவில் பங்கேற்பதாக முன்பே வாக்குறுதி அளித்துவிட்டதால், காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற இயலவில்லை என்று கூறியுள்ளாா். எனினும், அதிருப்தி காரணமாக அவா் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

முன்னதாக, சோனியா, ராகுல் ஆதரவு பெற்ற மல்லிகாா்ஜுன காா்கேவை எதிா்த்து காங்கிரஸ் தேசிய தலைவா் தோ்தலில் சசி தரூா் போட்டியிட்டதில் இருந்து அவா் மீது காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டது. மேலும், பாஜக மூத்த தலைவா் எல்.கே.அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது. பாஜக மீதான ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை சசி தரூா் நிராகரித்தது என காங்கிரஸ் தலைமைக்கு எதிரான கருத்துகளை அவா் அவ்வப்போது தெரிவித்து வந்தாா்.

எனினும், இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற கேரள காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சசி தரூா், ‘காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து நான் ஒருபோதும் விலகிச் செல்லவில்லை’ என்று கூறினாா்.

Dinamani
www.dinamani.com