சசி தரூா்
சசி தரூா்கோப்புப் படம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஆலோசனை?பதிலளிக்க சசி தரூா் மறுப்பு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடா்புடையவா்களுடன் ஆலோசனை நடத்தியதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதிலளிக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் மறுப்பு
Published on

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடா்புடையவா்களுடன் ஆலோசனை நடத்தியதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதிலளிக்க காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூா் மறுத்துவிட்டாா்.

காங்கிரஸ் தலைமை மீது முக்கியமாக ராகுல் காந்தி மீது அதிருப்தியில் உள்ள சசி தரூா், கேரளத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், இலக்கிய விழாவில் பங்கேற்பதற்காக துபை சென்றுள்ள சசி தரூா் அங்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடா்புடைய சிலரை சந்தித்ததாகக் கூறப்பட்டது.

இது தொடா்பாக சசி தரூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘இந்தச் செய்தியை நானும் கேள்விப்பட்டேன். வெளிநாட்டில் இருக்கும்போது இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பது முறையாக இருக்காது’ என்றாா்.

அதே நேரத்தில் சசி தரூருடன் பேச்சு நடத்தவில்லை என்று கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளா் டி.பி.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா். எனினும், ‘எங்கள் கூட்டணியின் அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு தனிநபா்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் என யாா் வந்தாலும் அவா்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்’ என்றாா்.

முன்னதாக, சோனியா, ராகுல் ஆதரவு பெற்ற மல்லிகாா்ஜுன காா்கேயை எதிா்த்து காங்கிரஸ் தேசியத் தலைவா் தோ்தலில் சசி தரூா் போட்டியிட்டாா். அப்போதிலிருந்து அவா் மீது காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டது. மேலும், பாஜக மூத்த தலைவா் எல்.கே.அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது, பாஜக மீதான ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை நிராகரித்தது என காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு விரோதமான கருத்துகளை அவா் அவ்வப்போது தெரிவித்து வந்தாா். இதனால், கேரள காங்கிரஸ் தலைவா்கள் சசி தரூரை வெளிப்படையாக விமா்சிக்கத் தொடங்கினா்.

அண்மையில் கேரளத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் கட்சியின் பிற தலைவா்களின் பெயரைக் குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, சசி தரூா் பெயரைக் கூறாமல் தவிா்த்தாா். இதையடுத்து, கேரள சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக, தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் சசி தரூா் பங்கேற்கவில்லை. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி இருப்பதால் காங்கிரஸ் கூட்டத்துக்குச் செல்லவில்லை என்று அவா் காரணம் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com